Tuesday, 28 March 2023

விதுர நீதி



மஹாபாரதம் ஒரு பெரிய நீதிக் களஞ்சியம்.

அதில் அற்புதமான ஒரு பகுதியாக அமைகிறது விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறும் நீதி உபதேசம். 

இந்த இருவருக்கும் இடையேயான உரையாடல் விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது; காலம் காலமாக பெரியோர்களால் வாழ்வாங்கு வாழும் வழியாக விதுர நீதி உபதேசிக்கப்பட்டு வருகிறது.

உத்யோக பர்வத்தில் ப்ரஜாகர பர்வத்தில் வருவது விதுர நீதி.

எந்த விதமான உடன்பாட்டிற்கும் வர முடியாது என்ற தன் உறுதியான நிலைப்பாட்டை துரியோதனன் எடுத்து, ஊசி அளவு இடம் கூட உங்களுக்குத் தர மாட்டேன் என்று பாண்டவர்களிடம் கூறி விடுகிறான். 

பாண்டவர்களுக்கும் தனது குமாரனான துரியோதனனுக்கும் நடக்கும் இந்த சண்டையை எண்ணி திருதராஷ்டிரனால் தூங்கவே முடியவில்லை. 

உடனே அவன் சகல நீதிகளையும் அறிந்த விதுரரை வருமாறு அழைப்பு விடுக்கிறான். 

அப்போது விதுரர் நீதி மொழிகளைப் புகல்கிறார்.

புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமான புதிர் போன்ற பாணியில் கூட அவரது உரை அமைகிறது. 

காலம் காலமாக உரையாசிரியர்கள் இதற்குத் தகுந்த விளக்கம் சொல்லி வந்துள்ளதால் நாம் விதுரர் கூறியதை உணர முடிகிறது.

விதுர நீதி

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்:–

1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.

2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.

3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.

4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.

5) தானத்தைக் கேட்கக் கூடாதவனிடம் கேட்பவன்.

6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்ப‍வன்.

7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்.

8) பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு, பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.

9) பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது 'நினைவில் இல்லையே...' என்று சொல்பவன்.

10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்... அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.

11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.

12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.

13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.

14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.

15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.

16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.

17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.

ஆகியோரே  பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment