Friday 10 November 2023

சொல்லக்கூடாத இரகசியங்கள்

 

தேனும் ஒரு செயலை செய்து கெட்ட பெயர் வாங்குபவர்களை விட, ஏதாவது ஒரு செயலை செய்வதாகச் சொல்லி, மற்றொரு நபர் அதனை வேறுவிதமாக மற்றவருக்குச் சொல்லி அதனால் கெட்ட பெயர் எடுப்பவர்கள் அதிகம். இப்படி எல்லா விஷயங்களையும் மற்றவரிடம் பகிர்பவர்களா நீங்கள்? உங்களுக்காக, நீங்கள் காக்க வேண்டிய இரகசியங்களைப் பற்றி இதில் பார்ப்போம்.

வெற்றிகள்: உங்களுடைய வெற்றியைப் பற்றி யாரிடமும் அதிகம் பகிராதீர்கள். ஏனென்றால், எல்லோருக்கும் உங்களது வெற்றி சந்தோஷம் அளிக்கக் கூடியதாக இருக்காது. அதற்காக நீங்கள் செய்த முயற்சியும் பயிற்சியும் அவர்களுக்குத் தெரியாது. பெரும்பாலான மக்கள் உங்கள் வெற்றியை மட்டும் பார்த்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்திருக்கும் அல்லது யாராவது ஒருவர் வாங்கி கொடுத்திருப்பார் என்று நினைப்பார்கள். அதனால் உங்கள் வெற்றியை அடுத்தவருக்குப் பகிராதீர்கள்.

காதல் வாழ்க்கை: உங்கள் காதல் வாழ்க்கையை யாரிடமும் பகிராதீர்கள். காதலுக்கு அழகே இரகசியம்தான். அந்த இரகசியத்தை மட்டும் காக்கத் தவறிவிட்டால், ஒன்று உங்கள் வாழ்க்கை அவருடன் சீக்கிரமாக ஆரம்பித்துவிடும் அல்லது அந்தக் காதல் முறிவில் முடியும். உங்கள் இருவருக்கும் இடையிலான காதலை மூன்றாவது நபருக்கோ, வேறொரு நபருக்கோ அவசரப்பட்டு தெரியப்படுத்தாதீர்கள். சரியான நேரம் வரும்பொழுது நீங்களே உங்கள் பெற்றோர்களிடமோ அல்லது உங்களுக்கு உதவும் நபர்களிடமோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

குறிக்கோள்கள்: உங்கள் வாழ்க்கைக்கான குறிக்கோள்களையும், திட்டங்களையும் யாரிடமும் பகிராதீர்கள். ஏனென்றால் நீங்கள் வகுத்த திட்டங்களை வைத்து அவர்கள் வாழ்வில் சீக்கிரம் முன்னேறி விடலாம். பிறர் முன்னேறுவதில் நமக்கு எந்த இடையூறும் கிடையாது. ஆனால், நாம் தீட்டிய திட்டத்தை நமக்கு முன்னால் இன்னொருவர் செயல்படுத்தும்போது அதனால் வரும் நமக்கான வாய்ப்பை நாம் இழந்து விடுவோம்.

வருமானம்: உங்களுக்கான வருமானம் மற்றும் வருமானம் வரும் இடங்களைப் பற்றி மற்றவர்களிடம் அதிகம் பகிராதீர்கள். உங்களிடம் இருக்கும் வருமானத்தைப் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டால். அவர்கள் தேவைக்காக ஏதேனும் ஒன்றை உங்களிடம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். உங்கள் சூழ்நிலை காரணமாக அதைத் தரவில்லை என்றால், உங்கள் மேல் பழி சொல்லி உங்களை இழிவுபடுத்த ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த இரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்களும் சாணக்கியரைப் போல் வாழலாம்!

No comments:

Post a Comment