தற்போது அடுக்ககங்களில் வசிப்போர், வீட்டிற்குள்ளேயே தொட்டிகளில் செடிகளை வைத்து வளர்கிறார்கள். இதன் மூலம் சில வகையான வாஸ்து செடிகள் அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் செல்வ வளத்தை மேம்படுத்துவதாக நம்பிக்கை. அவற்றில் முக்கியமான செடிகள் எவை, அவற்றை வீட்டில் எங்கே வைத்தால் நன்மை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மணி பிளாண்ட்: இதன் பேரிலேயே பணம் இருப்பதால், நிறைய வீடுகளில் இந்த செடிகளை வளர்க்கிறார்கள். இந்தச் செடி நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அதேவேளையில் எதிர்மறை எண்ணங்களை அழிப்பதாகவும் சொல்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் முன் அறையின் தென்கிழக்கு மூலைகளில் இந்த பணச் செடிகளை வைப்பது அதிர்ஷ்டத்தைத் தரும். வீட்டு நடைபாதையில் தொட்டியில் வைத்து வளர்ப்பதும் நல்லது.
மூங்கில் செடி: இந்தச் செடி வீட்டுக்கு மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ், அமைதி மற்றும் செல்வத்தைக் கொண்டு வருகிறது. இதை வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கில் வைத்து வளர்ப்பது நன்று. ஹால் டீப்பாய், அலுவலக மேசையை அலங்கரிக்கும் விதத்தில் வைப்பதும் சிறந்தது. விசேஷங்களில் பிறருக்குப் பரிசளிக்கவும் ஏற்ற தாவரம்.
லாவெண்டர்: லாவெண்டர் செடியின் நறுமணம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வீட்டை அலங்கரிப்பதற்கும் மருத்துவத்திலும் இது பயன்படுகிறது. இந்தச் செடியைப் பார்த்தாலே கோபமாக இருக்கும் மனநிலை மாறிவிடும். அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். படுக்கையறை ஜன்னல் ஓரமாக இந்தச் செடியை வைத்து வளர்க்க வேண்டும். இது நல்ல தூக்கத்தை வரவழைக்கும். உறவுகள் மேம்படவும் இது உதவுகிறது.
அமைதி லில்லி (Peace lily): அமைதி லில்லி செடி பெயருக்கு ஏற்றாற்போல மன அமைதியைக் கொண்டு வரும். அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் மறுவுருவம். இதை படுக்கையறையில் வைத்தால் உறக்கத்தை மேம்படுத்தி, கெட்ட கனவுகளைத் தவிர்க்கலாம். இதனுடைய கரும்பச்சை நிற இலைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. காற்றை சுத்திகரிப்பு செய்து, சுத்தமான காற்றை நமக்கு வழங்குகிறது. எதிர்மறை எண்ணங்களை விரட்டியடித்து, நேர்மறை எண்ணங்களை கொண்டு வருகிறது.
பாம்பு செடி (Snake plant): கெட்டியான கூர்மையான இலைகளைக் கொண்டதால் இதை பாம்பு செடி என்று அழைக்கிறார்கள். வாஸ்துபடி, பாம்பு செடி நேர்மறை ஆற்றலின் சிறந்த ஆதாரம். இதை ஜன்னலுக்கு அருகில் வைக்கும்போது, அது ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, அறைக்குள் அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது. இது அறையில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றுவதாகவும் நம்பப்படுகிறது.
ரப்பர் செடி: ரப்பர் செடியை வீட்டிற்குள் வைத்திருப்பது மங்கலகரமானதாக கருதப்படுகிறது. வளமான நிதி, செல்வச்செழிப்பு மற்றும் வணிக ரீதியான வெற்றியை இது கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. ரப்பர் செடியை அறையின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
ஜேட் செடி (Jade): ஜேட் செடி அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதோடு, வளர்ச்சியையும் இது குறிக்கிறது. மேலும், இந்தச் செடி நட்பை வளர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. வாஸ்துபடி, ஜேட் செடியை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனுடைய வட்டமான மென்மையான இலைகள் கண்களைக் கவரும் வண்ணம் இருக்கிறது.
டேபோடில்ஸ் செடி (Daffodils): அழகான மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ள இந்தச் செடி, சூழ்நிலையை அழகாக்குகிறது. இது அதிர்ஷ்டத்தையும் தொழில் ரீதியான அந்தஸ்தையும் கொண்டு வரும் என்று நம்புகிறார்கள். இதை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைப்பது நல்லது.
கற்றாழை: பெரும்பான்மையான வீடுகளில் வளர்க்கப்படும் இந்தச் செடி, மருத்துவ குணம் கொண்டது. இது சிறிதளவு சூரிய வெளிச்சத்தை நாடுவதால் ஜன்னல் ஓரத்தில் வைத்து வளர்ப்பது நல்லது. இது வீட்டுக்கு மகிழ்ச்சியையும் செழுமையும் கொண்டுவரும். வீட்டில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி நேர்மறையை சக்தியை ஈர்க்க, கிழக்கு அல்லது வடக்கு திசையில் இதை வைத்து வளர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment