Monday, 25 September 2023

மனிதனின் 5 உணர்வு நிலைகள்

 


திடீரெனத் தோன்றும் சில யோசனைகளை அவ்வப்போது குறித்து வைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், சிறிது நேரம் கழித்து அதன் தன்மை மாறிப்போக வாய்ப்புள்ளது. சிலது திடீரென்று மறந்தும் போய் விடும். அப்படித்தான் இந்தப் பதிவும். உடனே இதை முழுவதும் படித்துவிடுங்கள். இல்லையேல் மிகப்பெரிய விஷயத்தை நீங்கள் இழக்க நேரிடும்.

1. முதன் முதலில் அதீத உணர்வு என்ற ஒன்றை நாம் எப்போது அறிகிறோம் என்றால் தோல்வி, குற்றவுணர்வு போன்ற விஷயங்களில்தான்.

முதல் தோல்வியானது நம்முடைய சமநிலையை சுக்குநூறாக உடைத்து விடுகிறது. இந்த வலி பலருக்கும் முதல் காதல் தோல்வியாகவே இருக்கிறது. வேறு எதுவும் அது வரை அவர்களை அதிகமாகத் துன்புறுத்தியது இல்லை. பலருக்கு இத்தகைய உணர்வு குடும்பப் பிரச்னைகளாக, வேலையின்மையாக, நம்மால் எதையும் சரியாக செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்வின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். அந்த நிலையில்தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது எனலாம்.

2. இரண்டாவதாக கோபம், பயம், வெறுப்பு போன்ற உணர்வுகள்.

இவற்றை நீங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்து இருப்பீர்கள். சிலருக்கு எதைப் பார்த்தாலும் அதிகமாக கோபம் வரும். சிலருக்கு எதையும் தைரியமாக செய்ய முடியாத பயம் ஏற்படும். மேலும், இதுபோன்ற உணர்வுகளுக்கு காரணமாக இருக்கும் நபர்கள் மீது வெறுப்பு ஏற்படும். இந்த நிலையில் பலர் அவர்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

3. மூன்றாவது, ‘நம்மால் எப்பொழுதும் இதேநிலையில் இருந்து விட முடியாது’ என மனது சிறுகச் சிறுக அதை ஏற்றுக்கொள்ள முற்படும்.

வாழ்க்கையில் அடுத்தது என்ன என்பதை மூளை யோசிக்கும். இரண்டாம் நிலையிலிருந்து வெளிவர எதையாவது செய்யத் துணிவோம். அங்கே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் ஒரு கண்மூடித்தனமான தைரியமும் ஏற்படுகிறது.

4. நான்காம் நிலையில் நம்முடைய மனது பார்க்கும் அனைத்தையும் புரிந்துகொள்ளும் அளவுக்கு பக்குவப்படும்.

ஒரு காலத்தில் நாம் கோபப்பட்ட நபர்களை மன்னித்து விடுவோம். மனிதர்கள் இப்படித்தான் பல நிலைகளில் பல வகையாக மாறுவார்கள். வாழ்க்கை என்றால் இன்ப, துன்பங்கள் இருக்கும். பிறர் தவறாக இருந்தால் என்ன நாம் சரியானதை செய்வோம். இதுபோன்ற மனநிலை மாற்றங்கள் வெகுவாக ஏற்பட்டு, பிறர் மீது பெரும்பாலும் அன்பு செலுத்தவே தோன்றும்.

5. இவை அனைத்தையும் கடந்து இறுதியாக வரும் உணர்வு, ‘என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என்ற தைரியம்.

இந்த நிலையில் நமக்கு அனைத்தையும் வகை பிரித்துப் பார்க்கத் தெரியும். தற்போது எது சரி, எது தவறு, எது தேவை, தேவையில்லை என்பதை கண்ணாடி போல கண்டுபிடிக்க முடியும்.

  • காதல், கல்யாணம், வேலை, குடும்பம், நட்பு போன்ற பல விஷயங்களிலும் இந்த 5 உணர்வு நிலைகளில் நீங்கள் இருக்கலாம்.

ஆனால், யாராக இருந்தாலும் இந்த ஐந்து உணர்வு நிலைகளில்தான் இருந்தாக வேண்டும். நீங்கள் தற்போது எந்த உணர்வு நிலையில் இருக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அதை அடுத்தடுத்த நிலைகளுக்கு வேகமாக கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுங்கள். இறுதிநிலை உணர்வுதான் மனமுதிர்ச்சியின் உச்சக்கட்டம்.

THANKS  -  KALKIONLINE

No comments:

Post a Comment