சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது 9-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளின்போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன.
கீழடியில் இதுவரை நடந்த அகழாய்வுகளில் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய அணிகலன்கள், ஆயுதங்கள், கண்ணாடி மணிகள் என ஏராளமான பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள், ஆவணப்படுத்தப்பட்டு, கீழடி அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, கீழடியில் அகழாய்வு குழிகளை தோண்டும்போது ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிக்குள் சிவப்பு நிற சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன. சூதுபவள மணிகள் 1.4 செமீ நீளம் மற்றும் 2 செ.மீ விட்டம் கொண்டதாக பீப்பாய் வடிவத்தில் உள்ளன. அவற்றின் புகைப்படங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
இதுவரை ஒரே நிறத்தில் மட்டுமே கண்டறியப்பட்ட சூதுபவளங்கள் தற்போது அலை அலையாக வரி வடிவத்துடன் வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளது. இந்த சூதுபவள மணிகள் முற்காலங்களில் ஆபரணங்களாக கோர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment