Monday 18 September 2023

திருச்சி மலைக்கோயில் உச்சிப் பிள்ளையார்

கயிலாய மலைக்கு தோஷம் உண்டு; அதை ராவணன் அசைத்துப் பார்த்தான். பொதிகை மலைக்குத் தோஷம் உண்டு; அது இசைக்கு உருகிய மலை. ஆனால், திருச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கும் சிரா மலைக்கு எவ்வித தோஷமும் இல்லை. ஆனால் கயிலாயம் போன்று சிராப்பள்ளி மலையும் மூன்று அடுக்குகள் கொண்டது. எனவே, இதை ‘தட்சிண கயிலாயம்’ என்பார்கள்.

ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. ‘‘மேரு பர்வதத்தை இறுகப் பற்றிக் கொண்டு உன் பலத்தால் முடிந்தால் அகற்றிப் பார்!’’ என்றார் ஆதிசேஷன். வாயுவால் அந்த நிலையில் மேருவை அசைக்கக்கூட முடியவில்லை. அதனால் வாயுவுக்கு உதவ தேவர்கள் முன்வந்தனர்.

அவர்கள் ஆதிசேஷனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்து, ஆதிசேஷனது கவனத்தைச் சிதறடித்தனர். அந்த நேரத்தில் வாயு தன் பலத்தைக் காட்ட, மேரு பர்வதத்தின் பகுதிகள் ஆங்காங்கே சிதறி விழுந்தன! அப்படி சிதறி விழுந்த பகுதிகளில் ஒன்றுதான் சிரா மலை என்கிறது புராணம்.

மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது. அடிவாரத் திலிருக்கும் மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளிட்ட பகுதி முதல் நிலை. மட்டுவார்குழலம்மை உடனாய தாயுமானவர் திருக் கோயில்கள் இரண்டாம் நிலை. குடைவரைக்கோயில், உச்சி விநாயகர் கோயில் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை. இப்படி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதால், இதற்கு `முத்தலை மலை’ என்றும் பெயருண்டு.





திருச்சி மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்து ஆடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் சிவலிங்கம் போலவும் தெற்கில் இருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந் திருக்கும் ரிஷபம் போலவும் தோற்றம் அளிக்கும். அதுமட்டுமா? உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.


CLICK HERE to read 

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 15


CLICK HERE to read about Rockfort rock

No comments:

Post a Comment