Tuesday, 26 September 2023

காந்தியடிகள் - அரை வாளித் தண்ணீர்


காந்தியடிகள் குளிக்கச் செல்லும்போது ஒரு வாளியை மட்டுமே எடுத்துச் செல்வார். அதில் அரை வாளித் தண்ணீரில் குளித்து விடுவார். மீதி அரை வாளித் தண்ணீரில் துணிகளைத் துவைத்து விடுவார்.

இதனைப் பார்த்த நேரு, காந்தியடிகளைப் பகடி செய்தார். "பாபுஜி,‌ கங்கையில் தான் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறதே. எதற்காக இப்படி கஞ்சத்தனம் படுகிறீர்கள்" என்றார்.

"கங்கையில் எனக்காக மட்டும் தண்ணீர் ஓடவில்லை. எல்லோருக்காகவும்தான் ஓடுகிறது. எனவே, நான் இவ்வாறு அரை வாளித் தண்ணீரில்தான் குளிப்பேன்" என்றார் காந்தியடிகள்.

இதன் மூலம் காந்தியடிகள் எப்படி சிக்கனமாக வாழ்வது என்பதற்கு மிகப்பெரிய
ஒரு பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்.

வள்ளலார் கூட, "உனது ஒவ்வொரு செயலிலும் பொது நலச் சிந்தனை வேண்டும்" என்று கூறுகிறார்.

எனவே, நாம் பின்வரும் முறைகளைப் பின்பற்றி நமது தண்ணீர் நுகர்வு மட்டுமின்றி, அனைத்துப் பொருட்களிலும் சிக்கனமாக வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பொருட்களானது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. பொருட்களும் வீணாவதில்லை.

காந்தியடிகளைப் போலவே நாமும் குறைந்த அளவில் தண்ணீரைப் பயன்படுத்தலாம். தண்ணீர் செலவு குறையும். தேவைக்கேற்ப மின்சாரத்தைப் பயன்படுத்தலாம். படிப்பதற்கு டியூப் லைட்டும் மற்ற சமயங்களில் சிறிய பல்பையும் பயன்படுத்தலாம். மின்சாரச் செலவு குறையும். அளவுக்கு அதிகமாக துணிமணிகளைச் சேர்க்காமல் இருக்கலாம். இதன் மூலம் துணிமணிகள் குப்பைக்குச் செல்வது குறையும்.‌ முடிந்த அளவுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். மேலும், கூட்டாகப் பயணம் செய்யலாம். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும்.

முடிந்த அளவுக்கு விதவிதமான காய்கறிகளை உண்ணலாம். இதன் மூலம் குறிப்பிட்ட காய்கறிகளின் விலை கூடாமல் இருக்கும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பொழுது தேவைக்கேற்ப மட்டும் உணவை வாங்கலாம். உணவு வீணாவது குறையும்.

இப்படி நாம் நமது ஒவ்வொரு செயலிலும் பொதுச் சிந்தனையுடன் இருக்கும்பொழுது எல்லா மனிதர்களும் பொருட்களைப் பயன்படுத்த ஏதுவாக அமையும். பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாது.

Thanks  KalkiOnline

No comments:

Post a Comment