சில்பி (1919 - 10 ஜனவரி 1983) என அறியப்பட்ட பி. எம். சீனிவாசன் தமிழகத்தின் பிரபல கோட்டோவியராக வாழ்ந்து மறைந்தவர். கும்பகோணம் அருகிலுள்ள புலியூரில் பிறந்தவர். நாமக்கல் கவிஞரால் இவரது திறமை அடையாளம் காணப்பட்டு ஓவியக்கல்லூரியில் சேர ஊக்குவிக்கப்பட்டார்.
திருக்கோயில்களுக்கு நேரடியாகச் சென்று தங்கியிருந்து அங்குள்ள சிற்பங்களின் அழகையும் தெய்வத் திருவுருவங்களையும் ஓவியமாக வரைந்தவர். இவரது படைப்புகள் தமிழிதழ்களில் வெளிவந்தன.
அவரது கைவண்ணத்தால் கவரப்படாத தென்னாட்டுத் திருக்கோயில்களிலுள்ள மூர்த்திகளே கிடையாது என்று சொல்லலாம். எல்லோரது இல்லங்களையும் கோயில்களாக்கிய பெருமை அந்தத் திருக்கரங்களுக்கே உண்டு.
கல்லிலே கலைவண்ணம் கண்டவன் சிற்பி என்றால் அந்த கல் வண்ணத்தை எல்லாம் தன் கை வண்ணத்தால் இழைத்துத் தந்த கலைஞன் சில்பி. பிரசித்த பெற்ற திருத்தலங்களின் கருவறைக் கடவுளர்களை சிற்பச் சித்திரங்களாக்கி ஒவ்வொர் வீடுகளின் பூஜை அறையிலும் எழுந்தருளைச் செய்தவர். அந்த நாட்களில் சில்பியின் தெய்வீக ஓவியங்கள் பூஜிக்கப்படாத பூஜையறைகள் மிகமிகக் குறைவுதான். சில்பி எனும் அமர கலைஞனின் ஆன்மீகத் தூரிகையால் பிரதி எடுக்கப்படாத தென்னகத் திருக்கோயில்களின் மூலமூர்த்திகளே இல்லை எனலாம். இவர் வரைந்த கலை ஓவியங்கள் ஒவ்வொன்றும் காலம் கடந்து அழியாதிருக்கும் காவியங்கள்.


No comments:
Post a Comment