Sunday, 14 June 2026

வெண்பா எழுத விதிமுறைகள்

 

வெண்பா எழுத ஆசை. சரியான விதிமுறைகள் யாவை?

வெண்பா விதிமுறைகள்

இந்த அறுவர் தான் தமிழ் செய்யுட்களுக்குத் தலையாய தலைவர்கள். வெண்பாவிலும் இவர்கள் ஆதிக்கம் தான்.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை

இவர்களைப் பற்றி சுருக்கமாக:

  1. எழுத்து = உயிர், மெய், உயிர்மெய் - குறில், நெடில்
  2. அசை = எழுத்துகள் (ஒன்றோ, இரண்டோ - ஒற்றுகளுடன்) சேர்ந்து வருவது
  3. சீர் = சில அசைகள் சேர்ந்து சீராக அமைவது (சொல்/சொற்கள்)
  4. தளை = சீர்களைச் சேர்த்துக் கட்டுவது
  5. அடி = சீர்கள் வரிசையாக அமைவது
  6. தொடை = ஒரு ஒழுங்கு முறையில் தொடுக்கப்படுவது

அசை இரு வகைப்படும்.

  1. நேரசை = ஒரு குறிலோ, ஒரு நெடிலோ, ஒற்றுகள் எத்தனை வேண்டுமானாலும்.
  2. நிரையசை = இரு குறிலோ, ஓர் குறிலோடு ஒரு நெடிலோ, ஒற்றுகள் எத்தனை வேண்டுமானாலும்.

விதிகளுக்குள் நுழைவோம்.

விதி #1

  • வெண்பா - இரண்டு அடி (திருக்குறள்), அல்லது நான்கு அடிகள் (தனிப்பாடல் திரட்டு), உடையதாய் பெரும்பாலும் இருக்கும்.
  • பன்னிரண்டு அடிகள் வரை இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் அப்படி வெண்பாக்கள் இதுவரை நான் கண்டதில்லை.

விதி #2

  • ஈற்றடியில் (இறுதி அடி) மூன்று சீர்களும், ஏனைய அடிகளில் நான்கு சீர்களும் இருக்க வேண்டும்.

விதி #3

  • சீர்கள் - ஓரசைச் சீரில் இருந்து மூவசைச் சீர் வரை இருக்கலாம். மூவசையில் இறுதி அசை, ‘நிரை’யாக இருத்தல் கூடாது.

விதி #4

  • ஈற்றடியின் இறுதிச் சீர் - நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடு ஒன்றினுள் இருத்தல் வேண்டும். இது என்னவென்று கீழே உள்ள சுட்டிகளில் காண்க.

விதி #5

  • இரண்டு அடிகளுக்கு மேல் உள்ள வெண்பாக்களுக்கு, இரண்டாவது அடியில் - ஈற்றுச்சீரின் இரண்டாவது எழுத்து, முதல் அடியின் முதல் சீரின், இரண்டாவது எழுத்தை ஒத்திருக்க வேண்டும். ஆளை விடுங்கள், இப்போவே தலை சுத்துது என்கிறீர்கள், சரிதானே?! :) அவ்ளோ சுளுவா விட்டுருவோமா!!! ;)

விதி #6

இவற்றில் ஏதேனும் ஒரு முறையில் அமைதல் வேண்டும்.

  1. முதலடியின் முதலெழுத்தும், தொடர் அடியின் முதலெழுத்தும் ஒன்றி வருவது = மோனை
  2. முதலடியின் இரண்டாமெழுத்தும், தொடர் அடியின் இரண்டாமெழுத்தும் ஒன்றி வருவது = எதுகை

-

உதாரணம் 1:

இரண்டு அடிகள் கொண்ட, வள்ளுவ நாயனாரின் ஒரு குறள் வெண்பா

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

-

அசை பிரித்து

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி

பக/வன் முதற்/றே உல/கு.

-

விதி #1: இரண்டு அடிகள்

விதி #2: முதல் அடி நான்கு சீர்கள், இரண்டாவது அடி மூன்று சீர்கள்

விதி #3: ‘/’ கொண்டு அசைகள் பிரிக்கப்பட்டுள்ளது

விதி #4: உலகு = ‘பிறப்பு’ வாய்பாடு

விதி #5: NA

விதி #6: 2. இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் = எதுகை

-

உதாரணம் 2:

நான்கு அடிகள் கொண்ட, ஔவைப் பாட்டியின் ஒரு வெண்பா

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாரி

இருங்கதலித் தண்டுக்கு நாணும் பெருங்கானிற்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்ற

தீரிரவு துஞ்சாதென் கண்.

-

அசை பிரித்து

கருங்/கா/லிக் கட்/டைக்/கு நா/ணாக்/கோ டா/ரி

இருங்/கதலி/த் தண்/டுக்/கு நா/ணும் பெருங்/கானிற்

கா/ரெரு/மை மேய்க்/கின்/ற கா/ளைக்/கு நான்/தோற்/ற

தீ/ரிர/வு துஞ்/சா/தென் கண்.

-

விதி #1: நான்கு அடிகள்

விதி #2: இறுதி அடி மூன்று சீர்கள், ஏனைய மூன்று அடிகளில் தலா நான்கு சீர்கள்

விதி #3: ‘/’ கொண்டு அசைகள் பிரிக்கப்பட்டுள்ளது

விதி #4: கண் = ‘நாள்’ வாய்பாடு

விதி #5: ‘ரு' எழுத்து ஒன்றி வருவது.

விதி #6: அடிகள் (1&2), (3&4) - இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் = எதுகை

-

இது போக ஒரு சீர் நேரசையில் முடிந்தால் அடுத்து வரும் சீர், நிரையசையில் தொடங்க வேண்டும். ஒரு சீர் ‘மா’வில் முடிந்தால், அடுத்த சீர் ‘நிரையில்’ தொடங்க வேண்டும். காயிலும் விளத்திலும் முடிந்தால், அடுத்தது நேரில் தொடங்கவேண்டும்.

‘தளை தட்டுது’, ‘சுவையே இல்லை’ போன்ற பதங்கள் செய்யுட்களில், அதுவும் வெண்பாக்களில் மிகப் பிரபலம். இன்னும் இதைப் பிரித்துப் போட்டு பல நாட்கள் பேசற அளவிற்கு நம் முன்னோர்கள் ஆய்ந்திருக்கிறார்கள். இப்போதைக்கு இது போதும், பிறகொரு பதிவில் மேலும் வெண்பா பற்றிப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment