Thursday, 5 September 2013

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 25


1974ம் ஆண்டு

முதல்முறையாக சென்னைக்கு வந்த நான் நண்பன் நைனா முகமது வீட்டிற்கு செல்வதற்காக பஸ் மூலம் மைலாப்பூர் வந்து அவன் வீட்டைத் தேடி அலைந்தபோது ஒரு வீட்டு வாசலில் ஒரு பெரியவர் ஈசிசேரில் அமர்ந்திருந்தார்.  அவரிடம் வழி  கேட்கலாம் என்று அவரிடம் நெருங்கியபோது  அவரை எங்கோ பார்த்த ஞாபகம். அவரைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.

 அப்போது அங்கு வந்த வீட்டுப் பணியாள் என்னிடம் வந்து விசாரித்து நான் கேட்ட முகவரிக்கு வழி சொன்னார். சிறிது நேரம் கழித்து நண்பன் நைனாவுடன்   மறுபடியும் அந்த வீடு வழியாக சென்றபோது அந்த பெரியவர் எங்களைப் பார்த்து சிரித்தார்.

நைனாவிடம் " யாருடா இவர்?" எனக் கேட்டபோது

அவன் " இவரு நம்ம பழைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன். எப்பவுமே சாயந்தர நேரத்துல வீட்டு வாசல்ல உட்கார்ந்துருப்பாரு. நான் ஒருமுறை அவர்கிட்ட பேசியிருக்கேன்"னான்.

தலைப்பாகையுடன் பார்த்து, பார்த்து பழகிவிட்ட கண்களுக்கு தலைப்பாகை இல்லாத தோற்றத்தில் அடையாளம் தெரியவில்லை. அப்போது அவருக்கு வயது 85க்கு மேலாக இருக்கும்.

பாரதத்தின் முதல் குடிமகனாக பத்து ஆண்டுகள் பதவியில் இருந்தவர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என வியந்துகொண்டே அடுத்த முறை அவரை சந்தித்து ஆசிகள் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் அவர் பற்றிய நினைவுகளை நைனாவுடன் பகிர்ந்துகொண்டேன்.

ஒவ்வொரு செப்.5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படும் அவர் பிறந்தநாளுக்கு எனது மூத்த அண்ணன்  சுவாமிநாதன் அவருக்கு வாழ்த்து அனுப்புவார். Dr ராதாகிருஷ்ணனும் அதற்கு நன்றி தெரிவித்து தன் கைப்பட எழுதி அனுப்புவார்.

என் அண்ணனுக்கு உலகத் தலைவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து
அவர்களின் நன்றி/பதில் கடிதங்களைப் பெறுவது .வழக்கமாக இருந்தது.
சென்ற மாதம் அந்த கடித பொக்கிஷங்கள் சுந்து மூலம் எனக்கு  கிடைத்தன   ( Thanks a lot  Sundu ).

அந்த கடிதங்களை அவ்வப்போது ஸ்கேன் செய்து  post செய்கிறேன். 

 பத்து ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தவர் தன் தள்ளாத வயதில் உதவியாளர் துணை கூட இல்லாமல் தானே முகவரி முதற்கொண்டு பதில் எழுதியது - 

அவரிடமிருந்து

நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பண்பாகும்!

No comments:

Post a Comment