Wednesday 11 September 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 9


அறிவே தெய்வம் 

"என் இனிய மாணவச் செல்வங்களே!இதுவரை நாம் உயிர், பஞ்சபூதம், விண் , சுத்தவெளி, இறைநிலை, தெய்வம் போன்ற பல விஷயங்களை விஞ்ஞானரீதியாக புரிந்து கொண்டோம்.  உங்கள் சிந்தனை மிகவும் உயர்ந்துவிட்டது. இவற்றை வைத்துக் கொண்டு முக்கியமான ஒன்றை இப்போது தெளிவாக அறிந்து கொள்ளப் போகின்றோம். ஏன் சுத்தவெளி பிரபஞ்சமாக மாறியது என்று கேட்டீர்கள் அல்லவா?  இதுவரை பிரபஞ்ச தோற்றத்தைப் பற்றி மூன்று கேள்விகள் எழுப்பப் பட்டு வந்தன. அவை -

1. எந்த ஒன்று பிரபஞ்சமாக அல்லது அனைத்துமாக மாறியது?
2.அந்த ஒன்று எப்படி மாறியது?
3.அந்த ஒன்று ஏன் மாறியது?

நீங்கள் இறைநிலை என்ற சுத்தவெளி பற்றி நன்றாக புரிந்து கொண்டதால்தான் ஏன் சுத்தவெளி பிரபஞ்சமாக மாறியது எனக் கேட்டீர்கள்.எனவே முதல் கேள்விக்கான பதில் சுத்தவெளி எனும் இறைநிலைதான் பிரபஞ்சமாக, அனைத்துமாக மாறியது. இதில் சந்தேகம் ஏதுமில்லையே? " என அம்மா கேட்க மாணவிகள் "இல்லை" என்கிறார்கள்.

"இப்போது நம்மை எடுத்துக் கொள்வோம். இரவு 10 மணிக்குமேல் நமது ஆற்றல் குறைந்து நம்மையும் அறியாமல் தூங்கி விடுகின்றோம். காலையில் ஆற்றல் மிகுந்த நிலையில் படுக்கையை விட்டு எழுந்து நமது கடமைகளைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றோம்.  நாம் மாத்திரமல்ல -  எந்த உயிரினத்தையும் கவனித்துப் பாருங்கள். எதுவுமே இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.பிரபஞ்சத்தின் சிறு துகளாகிய நமக்கே ஆற்றலும், அறிவும் மிக, மிக  சும்மா இருக்க முடிவதில்லை எனில்  பிரபஞ்சத்தின் மூலமான எல்லையற்ற சுத்தவெளி பேராற்றல், பேரறிவு படைத்தது இல்லையா!  அது எப்படி சும்மா இருக்க முடியும்? சுத்தவெளியின் தன்மையே தன்னைத்தானே இறுக்கிக் கொள்வதுதான். இதனை தன்னிருக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றல் என்பார்கள். பொங்கி வழிவது எனவும் சொல்லலாம்.சுத்தவெளி பொங்கிக்கொண்டே இருப்பதனால் இதனை "பிரம்மம்" (நான்கு தலை பிரம்மா அல்ல) என்றும் அழைக்கின்றார்கள். மகரிஷி எழுதிய இன்னொரு இறைவணக்கப் பாடல்  


ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சி பெற்று
அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
மோதியிணைந் தியங்குகின்ற நிலைமைக்கேற்ப
மூலகங்கள் பலவாகி அவையி ணைந்து
பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடைஉணர்த லியக்கமாகி
நீதிநெறி உணர்மாந்தராகி வாழும்

நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்

 இதில் ஆதியெனும் சுத்தவெளிதான் இறைநில, மெய்ப்பொருள். அது எழுச்சி பெற்று பொங்க அதாவது தன்னைத்தானே இறுக்கிக்கொண்டு இறைத்துகளாக மாறி மேலும்  அவைகள் இணைந்து அணுக்களாகி, மூலகங்களாகி, பல்வேறு நட்சத்திரங்களாய், அண்டங்களாய் பிறகு ஓரறிவு தாவரம் முதல் பிறப்பு மற்றும்  இறப்பு உள்ள உயிரினங்களாக மாறி இறுதியில் ஆறறிவு படைத்த நீதிநெறி உணரத் தக்க மாந்தராக தன்மாற்றம் பெற்றுள்ளது என்பதனை எளிமையாக மகரிஷி விளக்குகின்றார்கள். இப்போது சொல்லுங்கள், யார் மனிதனாக வந்தது?"
அம்மா கேட்க 

" இறைநிலை எனும்  சுத்தவெளிதான் நாமாக இருக்கின்றோம் " என .மாணவிகள் கோரஸ்ஸாக சொல்கின்றனர்.
.
அஹம் பிரம்மாஸ்மி என்ற யஜுர் வேதத்தில் பிருஹதாரண்யக உபநிடதத்தில் வரும் மஹா வாக்கியம் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் - நானே பிரம்மன் ( இறைநிலை  என்று அர்த்தம்).

இதுபோல மற்ற மூன்று மஹா வாக்கியங்கள் -

பிரக்ஞானம் பிரம்ம -               அறிவே பிரம்மம் (ரிக் வேதம் )

அயம் ஆத்மா பிரம்ம -        இந்த ஆத்மா பிரம்மன் ( அதர்வண வேதம் )

மற்றும்

தத் த்வம் அஸி -                          பிரம்மமே நீ ( சாம வேதம் )

நாம் இதுவரை தெரிந்து கொண்டதையும், மகரிஷி விளக்கங்களை வைத்துக்கொண்டும், வேதங்களில் சொல்லப்பட்ட மகா வாக்கியங்களின் 
அர்த்தங்களைக் கொண்டும் ஆராய்ந்து பார்க்கும்போது இறைநிலைதான் அறிவாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டோம் அல்லவா!" என்கிறார் அம்மா.

"அறிவுத்திருக்கோவில் ஏன், எதற்காக என்பதையும்  புரிந்துகொண்டோம், அம்மா"என்கிறார்கள் மாணவிகள்.

அப்போது ஒரு மாணவி " அம்மா, நீங்கள் ஆரம்பத்தில் உயிரை உணர்ந்தால்தான் இறைநிலை உணர முடியும் என்றீர்கள். அதைப்பற்றி 
மேலும் விளக்குங்கள்" என கேட்க 

அம்மா தொடர்ந்து -பேசுகிறார்கள் -

தொடரும்  

எல்லாம் அறியும் அறிவு தனை விட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில்
எல்லாம் அறிந்த இறை எனல் ஆமே. 

 - திருமந்திரம் 

 இறைவெளி காட்சியாக எல்லோரும் பார்த்துக்கொண்டே 
மறைவாக நீ உள்ளாய் என மாற்றுரை பகர்கின்றார் 

- மகரிஷி 


2 comments:

  1. The 3 equivalent questions from modern science:
    1) What was thee before the Big Bang?
    2) How the Big Bang happened?
    3) Why the Big bang happened?

    :) :) :)

    ReplyDelete
    Replies
    1. Pl go through the first eight chapters ( and the next few chapters also ) & conclude

      Delete