கடவுள்
நிலாவைச் சுட்ட
நீண்டது விரல்
நகம்
முத்துச் சிப்பியைப் போல்
இருக்கிறது’
என்றான் ஒருவன்
‘ஒன்றுக்குப் போகனும்போல’
என்றான் மற்றொருவன்
‘இல்லை, அது நம்மை
அதட்டுகிறது’
என்றான் இன்னொருவன்
அதன் ரேகையை
ஆராய்ந்த ஒருவன்
‘ஏதோ தீமை
நடக்கப் போகிறது’
என்றான்\
ஒருவன் நகத்தில்
மருதாணி பூசினான்
மற்றொருவன்
ஒரு தங்க மோதிரம்
கொண்டு வந்து போட்டான்
பிறகு
விரல் வெட்டியெடுக்கப்பட்டு
பிரதிஷ்டை செய்யப்பட்டது
வழிபாடுகள்
தொடங்கின
ஆனால்
யாரும் பார்க்கவில்லை
நிலாவை
நன்றி : ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான்
No comments:
Post a Comment