Sunday 15 July 2012

இன்று படித்தது - 7


பலதடவைகள் படித்த " அம்மா வந்தாள் " நாவலை இன்னிக்கி மறுபடியும் படித்தேன். என்னோட  ஃபேவரிட்   எழுத்தாளர் தி. ஜானகிராமன் எழுதிய புரட்சிகரமான நாவல். 1960 களில் எழுதப்பட்டது.  தஞ்சை மண் மனம் வீசும் ( குறிப்பாக மாயூரம், கும்பகோணம்  மண் ) இந்த நாவலை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மலரும் நினைவுகளில் மனம் ஆழ்ந்து போகும். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் தமிழில் படித்தால் மட்டும்தான் உண்மையிலே ரசித்துப் படிக்க முடியும்!

கீழே கதைச் சுருக்கம் -

அப்பு தன் ஏழாம் வயதிலியே தன் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து ஒரு தூரத்து கிராமத்தில், குருகுலம் போன்ற ஒரு பாடசாலையில் வேதம் படிக்கப் போய்விடுகிறான். அங்கு அவனுக்கு வேதங்களும், ஆசார அனுஷ்டானங்களும் போதிக்கப்படுகிறது. அந்த பாட சாலை ஒரு வயதான விதவையின் தர்மத்தில் நடைபெறுகிறது. அங்கு ஏழுவயதிலேயே விதவையாகிவிட்ட ஒரு பெண்ணும் அந்த விதவை மூதாட்டியின் சம்ரக்ஷணையில் வளர்கிறாள். விதவைப் பாட்டிக்கு அப்புவிடம் ஒரு தனி பாசம். அதன் காரணமாக, சாதாரணமாக அந்த மாதிரியான ஆசாரம் மிகுந்த வீடுகளில் கிடைக்காத சலுகையோடும் சுதந்திரத்தோடும் அப்பு அந்த வீட்டில் வளைய வருகிறான்


அப்பு பதினேழு வருடங்கள் அந்த வேத பாடசாலையில் வேதங்களும் ஆசார அனுஷ்டானங்களும் படிப்பதில் கழிக்கிறான். இந்த பதினேழு வருஷங்களும் தன் பெற்றோர்கள் தன்னை மாத்திரம் ஏன் இந்தப் பாடசாலைக்கு வேதம் படிக்க அனுப்பினார்கள்?. தான் நான்காவது பிள்ளை. மற்ற மூத்த சகோதரகள், சகோதரிகள் எல்லாருக்கும் ஆங்கிலப் படிப்பு கிடைத்திருக்கும் போது தனக்கு மாத்திரம் ஏன் இப்படி என்ற எண்ணங்களில் அவ்வப்போது அவன் மனம் உளைச்சல் பட்டதுண்டு. அத்தோடு அந்தப் பாடசாலையில் வளைய வரும் அந்த விதவைப் பெண் இந்து தன்னிடம் காட்டும் பாசம், அதை ஏற்பதா, அல்லது மறுத்து ஒதுங்குவதா, என்ற ஊசலாட்டம் வேறு அவனை வாட்டிக்கொண்டிருந்திருக்கிறது. வேத பாடசாலைப் படிப்பு முடிந்ததும் அப்பு தன் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான். இந்து அவனை தன்னைவிட்டுப் போகவேண்டாம் இங்கேயே என்னோடேயே இருந்து கொள் என்று வற்புறுத்துகிறாள். அப்புவோ இந்துவை தான் தன் அம்மாவாகவே, வேதங்களைப் போன்ற ஒரு புனித வடிவிலேயே பார்த்து வந்ததாகச் சொல்லி மறுக்கிறான். இதைக்கேட்ட இந்துவுக்கு பொறுக்க முடிவதில்லை



 "அம்மாவாம் அம்மா! உங்கம்மா ரொம்ப ஒழுங்குன்னு நினைச்சுக்காதே. நானாவது உன்னியே நினைச்சுண்டு சாகறேன். உங்கம்மா யாரையோ நினைச்சுண்டு சாகாம இருக்கா பாரு. நான் உங்கம்மா இல்லை. நான் உன்னைத்தவிர யாரையும் நினைச்சதில்லேடா பாவி, அம்மா அம்மான்னு என்னை அவளோட சேர்க்காதே. எனக்கு ஏமாத்தத் தெரியாது!"

"என்ன சொன்னே?"

"சொன்னதைத்தான். உங்கப்பா அவ நல்லவள்னு ஏமாந்திருக்கார். நீ நான், பொல்லாதவள்னு ஏமாந்து கிடக்கே."

என்று தன் சீற்றத்தைக் கொட்டித் தீர்க்கிறாள்.



அப்பு 17 வருஷங்கள் கழித்து தன் வீடு திரும்புகிறான். அங்கு ஒரு ஆஜானுபாகுவான, மத்திம வயதினனான ஒரு அழகான பணக்காரன் தன் பழைய காதலியாக அம்மாவைப் பார்க்க வழக்கமாக வந்துபோய்க்கொண்டிருப்பது தெரிகிறது. அப்போது தான் அவனுக்குத் தெரிகிறது தான் தான் தன் அப்பாவுக்குப் பிறந்த கடைசிக் குழந்தை என்றும் அங்கு இருக்கும் தன் தம்பி தங்கைகள் எல்லாம் தன் தாய்க்கும் இந்த வந்து போகிற பணக்காரனுக்கும் பிறந்தவர்கள் என்று. இது வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. தன் அப்பாவுக்கும் கூடத் தான். அவரும் செய்வதறியாது இவ்வளவையும் சகித்துக்கொண்டு தான் அங்கு இருக்கிறார். எல்லாவற்றையும் ஒதுங்கி நின்று பார்க்கும், எதிலும் தான் ஒட்டாத சாட்சிபூதராகிவிடுகிறார். அவன் அம்மா அலங்காரத்தம்மாளுக்கு தன் கடந்த கால பாபங்கள் எல்லாம் தெரிந்தே இருக்கிறது. வருந்தி வேதனைப் படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. காலைச் சுற்றிய பாம்பு விடமாட்டேங்கறதே என்பது அவள் வேதனை.. இந்தப் பாபத்தைக் கழிக்கத் தான் அப்புவை தான் வேதம் படிக்க அனுப்பி வைத்ததாகவும், அவன் ஒரு ரிஷியாகத் திரும்பி வருவான், அவன் கற்ற வேதங்களின் ஒளிப் பிழம்பில் தன் பாபங்களைப் பொசுக்கிக்கொள்ள நினைத்ததாகச் சொல்கிறாள்.


அப்பு திரும்பிச் செல்கிறான். தன் பழைய வேதப் பாடசாலைக்கு. அவன் மேல தன் பாசமெல்லாம் பொழிந்த இந்துவிடமும் தான்.





கதை  அடல்ட்ரியாகத்   தெரிந்தாலும் எழுத்தில் மண்வாசனை நுகர அதுவும் மாயூரம்  மணம்  நுகர ஜானகிராமன் படைப்புகள் படியுங்கள்!


3 comments:

  1. JP, Thanks to your massive book collections - I remember reading this book one summer and remember the story very well. Would luv to read it again. Also remember reading a collection of short stories from தி. ஜா.

    Also trying to recollect the name of another Tamil Author. He is from the Kerala/Tamilnadu border (i think). One of his novels, closely reflected the customs and rituals we follow. Thinking hard to recollect his name :))

    ReplyDelete
  2. The novel mentioned by you is written by Neela. Padmanaabhan. The title of the novel is " Thalaimuraikal "
    He beautifully describes the life and customs of Chettiyar community which mostly resembles ours
    A movie named " Makizhchi " was taken based on this novel but I didnt see it.
    My copy of Thalaimuraikal" got damaged and I've to buy a new one.

    ReplyDelete
  3. Yes. The title "Thalaimuraikal " rings a bell :))
    Another similar style author is லா. சா.ராமாமிர்தம். Remember reading his novels too.

    ReplyDelete