Showing posts with label மகரிஷி அவர்களுடன். Show all posts
Showing posts with label மகரிஷி அவர்களுடன். Show all posts

Sunday, 16 March 2025

மகரிஷி அவர்களுடன்.........26

1997ம் ஆண்டு - மகரிஷி அவர்கள் " செயல் விளைவு தத்துவம் "  புத்தகத்தினை வெளியிட்டார்கள். அதனை ஆர்வமுடன் படிக்கத் துவங்கினேன். புத்தக ஆரம்பத்தில் மகரிஷி எழுதிய பாடல்கள் - " அறிஞர் பெரியோர் வணக்கம், குரு வணக்கம், பெற்றோர் வணக்கம், உலக நலவேட்பு " தரப்பட்டிருந்தது.அப்பாடல்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
( அந்த முதல் பதிப்பில் காணப்பட்ட அப்பகுதியினைக் கீழே தந்துள்ளேன் )

மகரிஷி அவர்களை சந்தித்து இப்பகுதியினைக் காட்டி விளக்கம் கேட்டேன். அதற்கு அவர்கள் " இதனை நானே இப்போதுதான் பார்க்கின்றேன். இதனை பழையபடி மாற்ற வேண்டும் " எனக் கூறிவிட்டு " ஒரு பேராசிரியர் என் பாடல்களை சீர்திருத்தம் செய்கின்றேன் என இப்படி செய்துள்ளார். என் அனுமதியும் பெறாமல் பதிப்பகத்திற்கு கொடுத்துள்ளார். என் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி " என சொல்லிவிட்டு 

" எட்டினிலே கை, எண்ணம் அகண்டாகாரம் 

இயற்கை ரகசியம் மலர்ந்து, எழுத்தாய் மாறும்

 -  பெரும்பாலான பாடல்கள் இப்படித்தான் எழுதப்பட்டன " என்றார்கள்.

" மேலும் ஏதேனும் தவறுகள் உங்கள் கண்களில் பட்டனவா ? " எனவும் கேட்டார்கள்.

" சில வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளனவே என விளக்கம் கேட்டுத்தான் உங்களிடம் வந்தேன். தாங்கள் எழுதியவற்றில் குறை இருக்கமுடியுமா " என பணிவுடன் பதிலளித்தேன். 

அதற்கு " இருக்கலாம். 'வளமுடன்' என்ற வார்த்தையினை 'வளத்துடன்' என்றுதான் உச்சரிக்க வேண்டும் என இன்னும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். நம் பயிற்சிகளில் மாற்றம் தேவைப்படின் கலந்தாலோசித்து முடிவெடுத்து செயல் படுத்த வேண்டும். இப்படித்தான் நம் உடற்பயிற்சியில் எல்லா நிலைகளிலும் ஐந்து முறைகள் செய்ய வேண்டும் என்பதினை சில நிலைகளில் மூன்றாய் குறைத்தோம். பஞ்சபூத தவம், நவகிரக தவம் இவற்றைத் தனித்தனியாக செய்தோம். பிறகு இரண்டையும் இணைத்தோம். தவறுகளைத் திருத்தித்தான் ஆகவேண்டும் " என முடித்தார்கள்.

மறுபடியும் கேட்டார்கள் : " எதிலாவது மாற்றம் தேவையா? "

நான் தயங்கியபடி " நவகிரக தவத்தில் சூரியன் பூமியைப்போல் 19 லட்சம் மடங்கு பெரிது என சொல்கின்றோம். இன்றைக்கு விஞ்ஞானம் 13 லட்சம் மடங்கு என சொல்கின்றது " என்றேன்.

" இதுபற்றி வரும் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம் " என்றார்கள் மகரிஷி அவர்கள்.

எங்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்வு காரணமாக என்னால் அந்த கூட்டத்திற்கு செல்ல இயலவில்லை. 



( This post is 16850th post of this blog and this blog has now more than 615000 views )



 

Tuesday, 24 September 2024

மகரிஷி அவர்களுடன்........23

2004

" மகரிஷி அவர்களுடன் ...." தொடர் இடையில் எழுத முடியாமல் போய்விட்டது. PhD  நேர்முகத் தேர்வும் ஒரு காரணம். மேலும் சான்றுகளுடன் விஷயங்களை எழுதினால்தான் சிறப்பாக இருக்கும் என எண்ணி என்னிடம் உள்ள மகரிஷி தொடர்பான விஷயங்களைத் தேடியபோது மேலே உள்ள படம் கிடைத்தது.
2004ம் ஆண்டு ஆழியாரில் மூத்த பேராசிரியர்களுக்கான  பயிற்சிகளை மகரிஷி வழங்கினார்கள். 

அச்சமயம் மு.பே. K G சாமி மற்றும் மனவளக்கலை உலகமெங்கும் குறிப்பாக ஒரிஸ்ஸா மற்றும் டெல்லியில் பரவ ஆழமாக அடித்தளம் அமைத்த போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் உயர்திரு தீனதயாளன் இருவருக்கும் பாராட்டு  விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் பொறுப்பினை எனக்குத் தந்திருந்தார்கள்.

இந்நிகழ்ச்சி தொடர்பான ஒலிநாடாக்கள், போட்டோக்கள் ஆழியார் 
archives ல் இருக்கலாம். 

இந்த அளவிலே இப்பதிவினை நிறைவு செய்கின்றேன்.
அடுத்த பதிவு விரிவாக இருக்கும்.

இந்த பதிவு ஞானவயலின் 2024ம் ஆண்டின் 5555வது பதிவு.
இதுவரை  பலர்   4,57,000     முறை  ஞானவயல் பதிவுகளை படித்திருக்கின்றார்கள்.
இப்பதிவு ஞானவயலின் 12622வது பதிவு. 

ANJEL  NO 5555

 

Friday, 19 July 2024

மகரிஷி அவர்களுடன்........22

மகரிஷி அவர்களுடன்.... 16ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு காரணமாக மகரிஷி அவர்கள் சிறிது வேதனைப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

அந்த நிகழ்வு பற்றி அறிந்துகொள்ள பலர் என்னிடம் தொடர்பு கொண்டனர். அதனைப் பற்றி இங்கே பதிவிடுகின்றேன் -

திருச்சியில் ஓர் அமைப்பினர் பழம்பெரும் தமிழ் நூல் பற்றிய இருநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்து மகரிஷி அவர்களை சிறப்பு சொற்பழிவாற்ற அழைத்திருந்தனர். அந்நிகழ்வில் கலந்துகொள்ள தன் உதவியாளர்களுடன் மகரிஷி அவர்கள் திருச்சி வந்து விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்கள்.

கருத்தரங்கம் துவங்குமுன் அமைப்பாளர்கள் மகரிஷி அவர்களிடம் தங்களின் சில பிரச்சனைகளைச் சொல்லி " தயவு செய்து தாங்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டாம் " என வேண்டிக்கொண்டார்களாம். மகரிஷி அவர்களும் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று விருந்தினர் மாளிகையிலேயே தாங்கிவிட்டார்கள். முதல்நாள் மாலையில் மகரிஷி அவர்களை சந்தித்தபோதுதான் இந்த விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது.

வருத்தத்தோடு இருந்த மகரிஷி அவர்களிடம்  " நாளை நாங்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கின்றோம். தாங்கள் வந்திருந்து நல்லதொரு தலைப்பில் உரை நிகழ்த்தி, கலந்துரையாடல் செய்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம். தங்களுக்கும் நிறைவு கிடைக்கும் " என வேண்டினோம்.

அதற்கு மகரிஷி அவர்கள் " நான் இங்கு இந்த அமைப்பாளர்களின் அழைப்பினை ஏற்று இங்கு வந்துள்ளேன். என்னை பயன்படுத்துவதும், பயன்படுத்தாமலிருப்பதுவும் அவர்கள்  உரிமை. அவர்கள் விருப்பப்படி நடப்பதுதான் என் கடமை "  என சொல்லிவிட்டார்கள்.

அடுத்தநாள் மதியம் ஒரு மகிழ்வான செய்தி எங்களுக்கு வந்தது - 

அந்த அமைப்பாளர்கள் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் மத்தியில் மகரிஷி அவர்கள் உரையாற்ற ஏற்பாடு செய்து  மனவளக்கலை அன்பர்களும் அதில் கலந்துகொள்ளலாம் என அறிவித்திருந்தனர்.

மாலை  4-30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி பற்றி திருச்சி பகுதியில் உள்ள அனைத்து அன்பர்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இருநூறு அன்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி பள்ளியில் இருந்த பிள்ளையார்கோவில் முன்புறம் இருந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சிறுமி பிள்ளையார் பாடலை இறைவணக்கமாகப் பாட நிகழ்ச்சி தொடங்கியது. நம் அன்பர் ஒருவரின் மகரிஷி அவர்களின் இறைவணக்கப் பாடல் மற்றும் குரு வணக்க பாடல்களுடன் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

                நம் அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகரிஷி அவர்கள்                 " கருமையத் தூய்மை " என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார்கள். 

உடனே மகரிஷி அவர்கள் ஆழியார் திரும்பிவிட்டார்கள்.

அடுத்த பத்து நாட்களிலேயே ஆழியாரில் மகரிஷியை சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.      மகரிஷி  அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திருச்சியில்  தனது இருநாட்கள் வீணாகிப்போனது பற்றியும், அமைப்பாளர்கள் தன்னை பயன்படுத்திக்கொள்ளாதது பற்றிய வேதனையையும்,  அமைப்பாளர்கள் பள்ளி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தாலும் அது தனக்கு நிறைவினைத் தரவில்லை என்றும் ஆனால் மனவளக்கலை அன்பர்களை பெருமளவில் பார்த்தது நிறைவினைத் தந்தது எனக்  கூறினார்கள். 

அப்போது மகரிஷி அவர்களிடம் " அடுத்த ஆண்டு நாங்கள் மிகப் பெரிய அளவில் காந்த தத்துவ கருத்தரங்கம் ஏற்பாடு செய்கின்றோம். தாங்கள் மூன்று நாட்கள் எங்களுக்காக ஒதுக்கித்தர வேண்டும் " என நான் வேண்டியபோது " வந்துட்டாப்போச்சு. நீங்க திட்டமிடுங்க " என உற்சாகத்தோடு உறுதி அளித்தார்கள். 

அது தொடர்பான கடிதங்களைத்தான் முந்தையப் பதிவில்  சொல்லியுள்ளேன். அதனைப் படிக்க Click here .


கருமையத்தூய்மை பற்றி விளக்குகின்றார்கள்

பிள்ளையார்கோவில் வாசலில் நிகழ்ச்சி 

நிகழ்ச்சி முடிந்தவுடன் அடியேன் பெல் மன்ற நிகழ்வு பற்றிய அறிவிப்பு கொடுக்கின்றேன் 

கருத்தரங்கம் மற்றும் அமைப்பாளர்கள் பற்றிய தகவல்கள் இங்கு வேண்டாம்.

ஆனால் பெல் மன்றத்திற்கு சரித்திர புகழ் பெற்ற காந்த தத்துவ கருத்தரங்கு நடத்திட இந்நிகழ்வு வழிகோலியது.

பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு பற்றிய வீடியோ பதிவினைக்  கொடுத்து உதவிய அமரர் அ/நி வேத சுந்தரம் அவரது மனைவி அ /நி சரோஜா அம்மையாருக்கும், அதனைப் பெற துணை நின்ற திருச்சி மண்டல பொருளாளர் அ/நி ஜம்புலிங்கம் அவர்களுக்கும் நன்றி மலர்கள். 




Tuesday, 28 May 2024

மகரிஷி அவர்களுடன்........19

1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிறைவில் ஆசிரிய பயிற்சிக்கு சென்றிருந்தபோது கிடைத்த அனுபவம் -

மகரிஷி அவர்கள் 45 நாட்கள் மௌனம் நிறைவு செய்து அருள்நிதியர் பயிற்சி துவங்கியிருந்தார்கள். மகரிஷி அவர்களை சந்திக்க நேரம் கேட்டபோது மதியம் இரண்டரைக்கு வரச் சொல்லியிருந்தார்கள்.

சொன்ன நேரத்தில் மகரிஷி அவர்களின் அறைக்குச் சென்றிருந்தபோது கோவை பேராசிரியர் அ/நி சிவஞானம் ஐயா மகரிஷி அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். 

பேராசிரியர் அ/நி சிவஞானம் ஐயா &  மகரிஷி ( 1990 )

( கோவை பேராசிரியர் அ/நி சிவஞானம் ஐயா அவர்கள் மனவளக்கலை புத்தகம் பாகம் ஒன்றினை  தொகுத்து வெளியிட்டவர். ஞானமும் வாழ்வும் நூலினையும் கோவையிலிருந்து பதிப்பித்து வெளியிட்டார். ஆசிரிய பயிற்சிகளின்போது அவரின் தொண்டு மிகவும் பாராட்டுக்குரியது. கோவையில் மனவளக்கலை பிரபலமாக இவரும் ஒரு காரணம்.)

நானும் அவருடன் இணைந்து பல ஐயங்களை மகரிஷி அவர்களிடம் எழுப்பினோம். மகரிஷி அவர்களிடம் நான் கேட்டது : 'துரியாதீத தவம் செய்யும்போது சில நொடிகள்தான் சிவகளத்தில் இருக்கமுடிகிறது. தொடர்ந்து இறைநிலை உணர்வோடு இருக்க வழிகள் சொல்லுங்கள் '

அதற்கு மகரிஷி அவர்கள் " உங்களைப் போலவே பலபேர் எளிதாக இறைநிலை உணர வழி கேட்டிருக்கின்றார்கள். இந்த மௌனத்தின்போது இதைப் பற்றி நிறையவே சிந்தித்தேன்." இறைநிலை தவம் " என ஒன்றினை அன்பர்களுக்குத் தர வேண்டி அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தத் தவம் முழுமையாக உணரப்பட வேண்டும்.கருமையம், காந்த தத்துவம் போன்றவற்றை விஞ்ஞான விளக்கத்தோடு  பயிற்சிகள் தரப்பட வேண்டும்.  எதிர்காலத்தில் பிரம்மஞானப் பயிற்சி என ஒன்றினைத் தந்து அந்த பயிற்சியின்போது இறைநிலை தவம் தரப்பட்டால் நீங்கள் விருப்பப்படும்போதெல்லாம் பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ   இறைநிலையோடு ஒன்றியிருக்கலாம். மேலும்           " தற்போது நீங்கள் கற்றுக்கொண்டவரையில் இறைநிலை உணர இதனைப் படித்துப் பாருங்கள் "எனக் கூறி   இரண்டு தாளை பேரா. சிவஞானம் ஐயாவிடம் தந்தார்கள்.

உடனே அவர் மகரிஷி அவர்களிடம் "இதைப் பார்த்து நான் எழுதிக் கொள்ளலாமா ?'' எனக் கேட்டார். மகரிஷி அவர்கள் "எழுதிக்கொள்ளுங்கள். ஆனால் இதனை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் சில விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டும்" என்றார்கள். 

சிவஞானம் ஐயா உடனே தனது டைரியில் மகரிஷி தந்த தாளில் இருந்த விவரங்களை வேகமாக எழுதிக் கொண்டார். அப்போது அவர் எனக்கு தந்த அறிவுரை : " எப்போது மஹரிஷியைப் பார்க்க வருகின்றீர்களோ உங்கள் கையில் ஒரு நோட்டு, பேனா இருக்கவேண்டும். மகரிஷி தரும் பொக்கிஷங்களை உடனுக்குடன் எழுதிக் கொள்ளவேண்டும்."

அவர் தந்த அறிவுரையினை மறக்காமல் பின்பற்றினேன். 

இறைநிலை தவம் பற்றி முன்னதாக ஓரளவு தெரிந்து கொண்டது, மகிழ்ச்சியினைத் தந்தது. பரிட்சைக்குமுன் வினாத்தாள் கிடைத்த பூரிப்பு.

பிறகு சிவஞானம் ஐயாவிடமிருந்து டைரியினைப் பெற்று நான் எழுதி வைத்துக் கொண்டேன். இதில் சொல்லப்பட்ட கருத்துக்களை வேறு தலைப்பில் மகரிஷி அவர்கள் அன்பொளியில் பிரசுரித்தார்கள்.

திருச்சி வந்ததும் புது டைரியில் இந்த தவம் பற்றி எழுதியதைக் கீழே தந்துள்ளேன்:




ஞானவயலின் இந்த    10000வது பதிவினை மகரிஷி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.


Sunday, 28 April 2024

மகரிஷி அவர்களுடன்........18

பெல் மன்றம் சார்பில்  6-7-97 அன்று நடைபெற்ற காந்த தத்துவ கருத்தரங்கு மிக, மிக சிறப்பாக மகரிஷி அவர்களுக்கு மிகவும் நிறைவாக நடைபெற்றது. அந்த சமயம் மூன்று நாட்கள் மகரிஷி எங்களுடன் தங்கியிருந்ததது எங்கள் பெற்றோர்கள், முன்னோர்கள்    செய்த புண்ணியம்.

நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு மகரிஷி அவர்களிடம் வரவு செலவு கணக்கு ஒப்படைத்தோம். மகரிஷிக்கு குரு காணிக்கையாக ரூ 10000/  அளித்தோம். எல்லா செலவுகளும் போக மீதி ரூ 19300/ இருந்தது. அதனையும் மகரிஷி அவர்களிடம் தந்து ஏற்றுக்கொள்ள வேண்டினோம். அதனை மகரிஷி எங்களிடம் திருப்பித் தந்து " இதனை ஒரு வங்கியில் FD ஆக செலுத்தி வையுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் கட்ட இருக்கும்   அறிவுத்திருக்கோயிலுக்கு உதவும் " எனக் கூறி " நீங்கள் கட்ட இருக்கும் அறிவுத்திருக்கோயில் பன்னாட்டு மையமாகத் திகழும். பல நாட்டு அறிஞர்கள் அங்கு வந்து பயிற்சி பெறுவார்கள். தொண்டாற்றுவார்கள் "என்ற வாழ்த்தினை மூன்றாவது முறையாக சொன்னார்கள். இந்த வாழ்த்தே பெல் அறிவுத்திருக்கோயிலின் முதல் விதையாக மாறி அறிவுத்திருக்கோயில் திட்டங்களை மனதளவில் ஆரம்பித்தோம்.

மூன்று  நாட்கள் கழித்து திருச்சியிலிருந்து வைகை விரைவு ரெயில் மூலம் சென்னை திரும்பினார்கள். 
நாங்கள் அவருக்கு நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்கள், பதிவு செய்யப்பட்ட  வீடியோ காசெட்டுகள் போன்றவற்றை அனுப்பி வைத்தோம்.

மகரிஷி அவர்கள் ஆழியார் திரும்பியவுடன் எங்களுக்கு எழுதிய கடிதம் கீழே - 



ஆழியாரில் மகரிஷி அவர்களை சந்திக்கும்போதெல்லாம் முதலில் அவர்கள் " திருச்சியில் நீங்கள் நடத்தினீர்களே ஒரு மாபெரும் கருத்தரங்கம் ... என் கண்களைவிட்டு அகலாத காட்சியாக இருக்கின்றது " எனப் பாராட்டிவிட்டு வாழ்த்துவார்கள்.

எங்களுக்கோ 1995ம் ஆண்டு மகரிஷிக்கு நடந்த கசப்பான அனுபவ நினைவுகளை மாற்ற எடுத்த முயற்சிகள் நிறைவாக நிறைவேறிய மகிழ்ச்சி 

இந்த பதிவு ஏப்ரல் மாதத்தின் 600th  பதிவு. வலைப்பூவின் 9250th   பதிவு 

Thursday, 28 March 2024

மகரிஷி அவர்களுடன்........17

 வேதாத்திரிய  வேள்வி  தினம் 

  

அருள்தந்தை அவர்களின் மஹாசமாதி தினமான இன்று மாலாவும், நானும் ஆழியார் வந்துள்ளோம்.  1990 தொடங்கி 2005   வரை மாலா ஒவ்வொரு மாதமும் ஆழியார் சென்று    மகரிஷி அவர்களை சந்த்தித்துவிட்டு வருவாள். என்னால் அப்படி செல்லமுடியவில்லை - அலுவலக வேலைகள் காரணமாக.     மகரிஷி அவர்களோடு உரையாடும்போது கிடைத்த அரிய தகவல்கள் ஏராளம்.

மகரிஷி அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்துவிடும். நாங்கள் அனுபவித்த சிலவற்றை                     " அருட்குரல் " மாத இதழ் ஒன்றில் ஏழாம் சுவை - நகைச்சுவை என்ற தலைப்பில் அறு(சு)வையானந்தா என்ற புனைபெயரில் கொடுத்துள்ளேன். அதனுடைய link கீழே -

click  here

 "ஞானமே ஆனாலும் குடும்ப அமைதியை இழந்து பெறுவதற்கு ஒன்றுமில்லை " என குடும்ப அமைதிக்கு முன்னுரிமை கொடுத்தவர் அருள்தந்தை அவர்கள். அவர்கள் சொன்ன கருத்துக்களோடு நகைச்சுவை சேர்த்து நான் ' அருட்குரலில் ' எழுதிய கட்டுரை படிக்க கீழே link உள்ளது

click  here 

எங்களது 25வது திருமண நாளினை ஆழியாரில் கொண்டாடினோம். அப்போது அருள்தந்தையின் ஆசிகள் பெற்றதை " ஞானவயலில் " பதிவு செய்துள்ளேன். அதனை படிக்க link கீழே -

click  here








Sunday, 24 March 2024

மகரிஷி அவர்களுடன்........16

06-07-1997  மறக்க முடியாத நாள்

பெல் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட,  1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட " காந்தத் தத்துவக் கருத்தரங்கம்" நிகழ்ந்த நன்னாள்.

1995ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வின் காரணமாக சிறிது வேதனை அடைந்திருந்த  மகரிஷிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த கருத்தரங்கம். 

இதனை நடத்த வாய்ப்பளித்த இறைநிலைக்கும், மகரிஷிக்கும் என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம். 





1995ம் ஆண்டு என்ன நடந்தது?  மகரிஷி ஏன் வேதனையுற்றார்கள் ?

இது பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன்   


மகரிஷி  விரும்பியபடி 1995ம் ஆண்டுத்தொடங்கி இரண்டரை ஆண்டுகள் திட்டமிட்டு நடத்தப்பட்ட கருத்தரங்கம் தொடர்பாக மகரிஷி எழுதிய கடிதங்கள்  கீழே -       

 





இது தவிர இரண்டு முறை சென்னை சென்று மகரிஷி அவர்களுடன் கருத்தரங்கம் பற்றி மிக விரிவாக ஆலோசனை செய்து ஏற்பாடுகளைத் துவக்கினோம்.
இப்படியொரு கருத்தரங்கம் இதுவரை நடத்தப்படவில்லை எனப் பலராலும் பாராட்டப்பட்ட WCSC  சரித்திர நிகழ்வு.

TO READ EARLIER POST NO 15   CLICK  here

IN P0ST 15, LINKS ARE GIVEN FOR EARLIER POSTS