Sunday 7 August 2022

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம்.


ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள்.

தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்


தனக்கு கிடைத்த மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இந்தப் பாடலில் கூறுகிறார் திருமூலர்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே

கொஞ்சம் வரிகளை இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம் புரியும்.

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 
சொல்லிடின்
வான் பற்றி நின்ற மறை பொருள் 
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

நம் உடலுக்குள்ளே ஒரு மந்திரமானது உணர்வு வடிவில் உள்ளது. அதை சொல்லிடின், இந்த அகிலமெல்லாம் நிறைந்த அந்த மறை பொருள் நாம் பற்றிக் கொள்ளும் வகையில் தலைப்படும். அப்படி தனக்கு தலைப்பட்டதால் வந்த இன்பம் இந்த உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று விழைகிறார் திரு மூலர். 

அது என்ன மந்திரம் ? திருமூலர் சொல்லவில்லை. நம் உடலுக்குள் உணர்வாய் இருக்கும் மந்திரம் சொல்லச் சொல்ல இந்த உலகமெல்லாம் நிறைந்த அந்த மந்திரமும் கை வசப் படும் என்கிறார் திருமூலர்.

இதற்கு மேல் அவர் ஒன்றும் சொல்லவில்லை. 

No comments:

Post a Comment