Sunday, 31 July 2022

நாலாயிர திவ்யப்பிரபந்தம்


ஆழ்வார்கள் திருமாலின் பெருமை குறித்துப் பாடிய பாசுரங்கள் திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன.


திவ்யப் பிரபந்தங்கள் மொத்தம் 24.  

  1. திருப்பல்லாண்டு
  2. பெரியாழ்வார் திருமொழி
  3. திருப்பாவை
  4. நாச்சியார் திருமொழி
  5. பெருமாள் திருமொழி
  6. திருச்சந்த விருத்தம்
  7. திருமாலை
  8. திருப்பள்ளி எழுச்சி
  9. அமலனாதிபிரான்
  10. கண்ணிநுண் சிறுத்தாம்பு
  11. பெரிய திருமொழி
  12. திருக்குறுந்தாண்டகம்
  13. திருநெடுந்தாண்டகம்
  14. முதல் திருவந்தாதி
  15. இரண்டாம் திருவந்தாதி
  16. மூன்றாம் திருவந்தாதி
  17. நான்முகன் திருவந்தாதி
  18. திருவிருத்தம்
  19. திருவாசிரியம்
  20. பெரிய திருவந்தாதி
  21. திருஎழுகூற்றிருக்கை
  22. சிறிய திருமடல்
  23. பெரிய திருமடல்
  24. இராமானுச நூற்றந்தாதி

நாலாயிர திவ்ய பிரபந்தம் நான்கு ஆயிரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

1. முதலாயிரம் - 947 பாடல்கள்
  1. திருப்பல்லாண்டு - பெரியாழ்வார் -12 பாடல்கள் 
  2. பெரியாழ்வார் திருமொழி - பெரியாழ்வார் - 461 பாடல்கள் 
  3. திருப்பாவை - ஆண்டாள் - 30 பாடல்கள் 
  4. நாச்சியார் திருமொழி - ஆண்டாள் - 143 பாடல்கள் 
  5. பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார் - 105 பாடல்கள் 
  6. திருச்சந்த விருத்தம் - திருமழிசை ஆழ்வார் - 120 பாடல்கள் 
  7. திருமாலை - தொண்டரடிப்பொடி ஆழ்வார் - 45 பாடல்கள் 
  8. திருப்பள்ளி எழுச்சி - தொண்டரடிப்பொடி ஆழ்வார் - 10 பாடல்கள் 
  9. அமலனாதிபிரான் - திருப்பாணாழ்வார் - 10 பாடல்கள் 
  10. கண்ணிநுண் சிறுத்தாம்பு - மதுரகவி ஆழ்வார் - 11 பாடல்கள் 
2. பெரிய திருமொழி - 1134 பாடல்கள்
  1. பெரிய திருமொழி - திருமங்கை ஆழ்வார் - 1084 பாடல்கள் 
  2. திருக்குறுந்தாண்டகம் - திருமங்கை ஆழ்வார் - 20 பாடல்கள் 
  3. திருநெடுந்தாண்டகம் - திருமங்கை ஆழ்வார் - 30 பாடல்கள் 
3.  இயற்பா - 817 பாடல்கள்
  1. முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார் - 100 பாடல்கள் 
  2. இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார் - 100 பாடல்கள் 
  3. மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார் - 100 பாடல்கள் 
  4. நான்முகன் திருவந்தாதி - திருமழிசை ஆழ்வார் - 96 பாடல்கள் 
  5. திருவிருத்தம் - நம்மாழ்வார் - 100 பாடல்கள் 
  6. திருவாசிரியம் - நம்மாழ்வார் - 7 பாடல்கள்
  7. பெரிய திருவந்தாதி - நம்மாழ்வார் - 87 பாடல்கள்
  8. திருஎழுகூற்றிருக்கை - திருமங்கை ஆழ்வார் - 1 பாடல் 
  9. சிறிய திருமடல் - திருமங்கை ஆழ்வார் - 40 பாடல்கள்  
  10. பெரிய திருமடல் - திருமங்கை ஆழ்வார் - 78 பாடல்கள்  
  11. இராமானுச நூற்றந்தாதி -  திருவரங்கத்தமுதனார் - 108 பாடல்கள் 
4. திருவாய்மொழி - நம்மாழ்வார் - 1102 பாடல்கள்

மொத்தம் - 4027 பாடல்கள்

இவ்வாறு பிரபந்தங்கள் வகுக்கப்பட்டிருப்பதில் இரண்டு சிறப்புகளைக் குறிப்பிட வேண்டும்.

1) மதுரகவி ஆழ்வார் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற 11 பாடல்களும் நம்மாழ்வார் பற்றிப் பாடப்பட்டவை.

2) இராமானுச நூற்றந்தாதி ராமானுஜருடன் சம காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்தமுதனார் என்ற அவருடைய சீடரால் ராமாநுஜரின் பெருமை குறித்துப் பாடப்பட்டது.

இந்த இரண்டு பாடல் தொகுப்புகளும் திருமால் மீது பாடப்பட்டவை அல்ல. அதிலும் திருவரங்கத்தமுதனார் ஆழ்வார்கள் பட்டியலில் இடம் பெறுபவர் இல்லை.

என்ற போதிலும், இவை இரண்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இது வைணவத்தில் நம்மாழ்வாரும், ராமானுஜரும் எவ்வளவு உயர்ந்த இடத்தில், திருமாலுக்கு நிகராகவே நினைத்துப் போற்றப் படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

காய்கறிகள் பற்றிய வேறு செய்திகள்

காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது என கூறுவார்கள். ஆனால் சமைத்து சாப்பிடுவதே அதைவிட சிறந்தது. 


கேரட், உருளைக் கிழங்கு,  வெள்ளரிக்காய் உட்பட அனைத்து காய்கறிகளையும் தோலுடன் சேர்த்துக் கொள்வதே நல்லது. 

பண்டைய எகிப்தில் பிரமிடுகளை கட்டிய தொழிலாளர்களுக்கு கூலியாக முள்ளங்கி, வெங்காயம் மற்றும் பூண்டு வழங்கப்பட்டது. 

1845 - 1852 வருடத்தில் அயர்லாந்தில் பஞ்சம் ஏற்பட்டு ஒரு மில்லியன் மக்கள் இறந்தனர். அந்த பஞ்சம் ஏற்பட உருளைக் கிழங்கு முக்கிய காரணமாக இருந்தது. உருளைக் கிழங்கு சாகுபடியில் ஒருவித நோய் தாக்க அதை மட்டுமே நம்பிய மக்கள் பஞ்சத்தில் சிக்கினர். "உருளைக் கிழங்கு பஞ்சம்" என்றே அது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. 

காய்கறிகளிலேயே அறுவடை செய்த செடி உட்பட அனைத்தையும் உண்ணக் கூடியது பீட்ரூட் மட்டும்தான். பீட்ரூட் சாற்றைக் கொண்டு தலைக்கு வண்ணம் பூசிய வண்ணமயமான காலம் இருந்திருக்கிறது. 

உங்களது குரலை பிறர் கவனிக்க வேண்டுமா? பூண்டு மற்றும் வெங்காயத்தின் சொந்தமான லீக்ஸ்ஸை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில், ரோம் மன்னன் நீரோ போன்றவர்கள் அதனை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டனர். 

கத்தரிக்காய் என்றாலே இத்தாலியர்கள் கிலி ஆவார்கள். இத்தாலிய மொழியில் "மெலன்சானா (Melanzana)" என்பதுதான் அதன் பெயர். அதற்கு "பைத்தியக்கார ஆப்பிள் (apple of madness)" என்று பொருள். 

வெண்டைக்காய் விதையை காயவைத்து வறுத்து அரைத்து காபியைப்போல காபிக்கு மாற்றாக குடிக்கலாம். 1863 -ல் அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடந்த காலத்தில் காபி தட்டுப்பாடு ஏற்பட, மக்கள் காபியைப் போல வேறொன்றை தேடினர். அதில் வெண்டைக்காய் விதை காபியே சிறந்ததாக இருந்தது. காபியில் இருக்கும் காஃபின் நச்சுத்தன்மை இல்லாமலும் இருந்தது. 

புடலங்காயின் பழத்தை பார்ப்பது அரிது (விட்டுவைத்தால் தானே!). சதை நிறைந்த முற்றிய புடலங்காயை தெற்கு ஆப்பிரிக்காவில் தக்காளிக்கு பதிலாக புளிப்பிற்காக பயன்படுத்துவார்கள்.

நீண்ட காலமாக அமெரிக்கர்கள் உருளைக் கிழங்கு குதிரைகளுக்கு மட்டுமே ஏற்றது என நம்பி வந்தனர். அதுபோல் பைபிளில் ஒரு வார்த்தைக் கூட உருளைக் கிழங்கு இல்லை,  

வெங்காயமா? முட்டைகோஸா எது பழமையானது என்ற போட்டி உண்டு. போட்டியிடும் நாடு சீனா. அங்குதான் முட்டைகோஸ் அதிக அளவு விளைகிறது. முட்டைகோஸ் மட்டுமல்லாது உலகின் பெரும்பான்மையான காய்கறிகளை விளைவிப்பதில் சீனாதான் என்றுமே முதலிடம். இந்தியாவிற்கு இரண்டாமிடம். 

உருளைக் கிழங்கு, தக்காளி இவற்றை ஆங்கிலத்தில் உச்சரிக்க ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும். உருளைக் கிழங்கு (potato) கிழங்கு வம்சம். தக்காளி (tomato) செர்ரி என்ற பழ வம்சம். இரண்டும் இணைந்தால் எப்படியிருக்கும் என விஞ்ஞானிகள் யோசித்ததுதான் "போமாட்டோ (pomato)". 

தக்காளியில் மஞ்சள், வெள்ளை, இளஞ் சிவப்பு, ஊதா, கருப்பு நிறமெல்லாம் உண்டு, நாம்தான் சிவப்பை மட்டும் பயன்படுத்துகிறோம். 

Saturday, 30 July 2022

எஸ்பிபி-க்கு வைரமுத்துவின் இரங்கல் கவிதை



 மறைந்தனையோ

மகா கலைஞனே!

சுரப்பதை நிறுத்திக் கொண்டதா

உன் தொண்டை அமுதம்?

காற்று வெளியைக்

கட்டிப்போட்ட உன் நாவை

ஒட்டிப் போட்டதோ மரணப் பசை?

பாட்டுக் குயில் போனதென்று

காட்டுக் குயில்கள் கதறுகின்றன

ஒலிப்பதிவுக் கூடங்களெல்லாம்

ஓசை கொன்று எழுந்துநின்று

மவுனம் அனுஷ்டிக்கின்றன

மனித குலத்தின் அரைநூற்றாண்டின்மீது

ஆதிக்கம் செலுத்தியவனே!

மண் தூங்கப் பாடினாய்

மலர் தூங்கப் பாடினாய்

கண் தூங்கப் பாடினாய்

கடல் தூங்கப் பாடினாய்

நீ தூங்குமொரு தாலாட்டை

எவர் பாடியது?

மனிதர் பாடவியலாதென்று

மரணம் பாடியதோ?

பொன்மேடை கண்டாய்

பூமேடை கண்டாய்

இந்த உலக உருண்டையை

முப்பது முறை வலம் வந்து

கலைமேடை கண்டாய் என்

கவிமேடை கண்டாய்

கடைசியில் நீ

மண்மேடை காண்பது கண்டு

இடிவிழுந்த கண்ணாடியாய் நெஞ்சு

பொடிப்பொடியாய் போனதே பாலு

நாற்பது ஆண்டுகள் என் தமிழுக்கு

இணையாகவும் துணையாகவும் வந்தவரே!

இன்றுதான் என் பொன்மாலைப் பொழுது

அஸ்தமன மலைகளில் விழுகிறது

என் சங்கீத ஜாதிமுல்லை

சருகாகிப் போகிறது

என் இளைய நிலா

குழிக்குள் இறங்குகிறது

என் பனிவிழும் மலர்வனம்

பாலைவனமாகிறது

காதல் ரோஜாவே

கருகிப் போகிறது

என் வண்ணம்கொண்ட வெண்ணிலா

மரணக் கடலில் விழுந்துவிட்டது

மழைத் துளியை மறக்காத

சாதகப் பறவை போல்

உன்னை நினைத்தே நானிருப்பேன்

ரோஜாக்களை நேசிக்கும்

புல்புல் பறவை போல்

உன் புகழையே நான் இசைப்பேன்

முகமது ரபி-கிஷோர் குமார்

முகேஷ் - மன்னாடே - தியாகராஜ பாகவதர்

டி.எம்.சவுந்தரரராஜன் வரிசையில்

காலம் தந்த கடைசிப் பெரும் பாடகன் நீ

உன் உடலைக் குளிப்பாட்டுவதற்கு

கங்கை வேண்டாம்

காவிரி வேண்டாம்

கிருஷ்ணா வேண்டாம்

கோதாவரி வேண்டாம்

உலகம் பரவிய உன் அன்பர்களின்

ஜோடிக் கண்கள் வடிக்கும்

கோடித் துளிகளால்

குளிப்பாட்டப்படுகிறாய் நீ!

இதோ!

என்னுடையதும் இரண்டு.

- வைரமுத்து

தியானம் செய்வது எப்படி? - பாலகுமாரன்

 

தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும்


இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை.

சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது.

எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு.


தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்கள். என்ன செய்கின்றார்கள் என்ற ஆவல் இல்லாது போகும். அந்தரங்கம் தெரியும். பேராசையற்றுப் போகும். அவர்களும் நம்மைப் போல் நல்லதும், கெட்டதும் நிறைந்தவர்கள் என்கிற விருப்பு வெறுப்பற்ற நிலை வரும்.

இந்த நிறை வர அடுத்த வீடு என்ன என்பது எளிதாய் புரியும். அழகிய பெண் இருக்கிறாள் என்று ஆசைப்படாமல், அவலமான குடும்பம் என்று வெறுப்பு கொள்ளாமல் மனித சுபாவங்களை உணரமுடியும். அப்போது சிநேகம் எதிர்பார்ப்பின்றி இருக்கும். எதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களுக்கு புரிய, உள்ளத்தைத் திறந்து தானே உன்னிடம் கொட்டுவார்கள். அப்போது சலனமற்று பேச அடி ஆழத்தில் உள்ளதெல்லாம் வெளியே வரும். அடுத்த வீடு பற்றி சகலமும் புரியும். நான் மனிதர்களை புரிந்து கொள்ளும் விதம் இதுவே.

விருப்பு வெறுப்பற்ற மனம் எப்படி வரும்? ஏகப்பட்ட விருப்பங்கள் உள்ளனவே, கண்டபடிக்கு வெறுப்பு இருக்கிறதே, மேலும் கேள்வி வரலாம். எனக்கும் இருந்தது தோழா, மெல்ல மெல்ல மாறினேன். சொடுக்கு நேரத்தில் இது கை கூடாதய்யா. சொல்லிக் கொடுத்து விட்டால் வராது தம்பி. கற்றுக்கொடுப்பதில் விசேஷம் இல்லை. கற்றுக் கொள்வதில்தான் காரியம் உண்டு. நீச்சல் தரையிலா சொல்லித் தர முடியும். தியானத்தை புத்தகத்திலா எழுதி காட்ட முடியும். ஆர்வம் தூண்டலாம். ஒன்று இரண்டு மூன்று என்று விதிகள் எழுதலாம், படித்து விட்டு நீச்சல் குளம் தேடிப்போய் நீரில் இறங்க வேண்டும். குளிரக் குளிர நனைய வேண்டும். நீச்சல் விதிகள் மறந்து சும்மா தரையைப் பிடித்துக் நீச்சலடிக்கிறவர்களை வேடிக்கை பார்க்கும் புத்தி வரும். அதை விலக்கி கம்பியை பிடித்து உடம்பு லேசாக்கி கால் மட்டும் தூக்கிப் போட்டு பயிற்சி துவங்க வேண்டும். உடம்பு அசைக்காமல் வெறுமே முடிந்த வரை மிதக்க வேண்டும். இடைவிடாது நீச்சல் வரும் வரை செய்ய வேண்டும்.


ஏதோ ஒரு கணம் நீச்சல் வந்து விடும். என்ன காரணம்? தெரியாது. இது போலவே தியானமும். ‘தியானம் பண்றேன் மச்சி, நீயும் பண்ணு’ செய்து பழகும் முன்னே செயல்முறை பற்றி தம்பட்டம் அடிக்கத் தோன்றும். இந்த அலட்டல் தியானத்திற்கு எதிர் விஷயம், உடனே நிறுத்தி விடவேண்டும். இரண்டு நாள் செய்துவிட்டு முகம் மாறியிருக்கா என்று கண்ணாடி முன்பு பார்க்க தோன்றும். இது பொய், விலக்க வேண்டும். ‘இடுப்பு நோவுது, கால் மரத்தது போல் ஆகுது, இருபது நிமிஷம் சீக்கிரம் ஆயிட்டா நல்லா இருக்கும்’ இந்த வன்முறை வேண்டாம். இயலவில்லையெனில் எழுந்து உலவிவிட்டு மறுபடி உட்காருதல் நலம்.

கண்ணை மூடிக்கொண்டு தியானம் வந்துவிட்டது போலவும், பாலகுமாரன் போல் தாடி குங்குமம் வைத்து கொண்டது போலவும், ஊர் உறவு எல்லாம் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொள்வது போலவும் கற்பனை வரும். இது சுகம். ஆனால் விஷம். தவிர். இனியனே, பொய்யற்று இரு. உலகத்தாரிடையே பொய் சொல்வதை தவிர்க்க முடியாதிருக்கலாம், உனக்கு நீயே சொல்லலாமா. இதில் உபயோகம் உண்டா, யாரை ஏமாற்றப் பொய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளப் போகிறாயா, ஆமெனில் அழிவு நிச்சயம்.

கடும் உண்மையோடு இரு. கண்டிப்பான உண்மையோடு இரு. எதற்கு எனக்கு தியானம் என்று கேள்வி கேள், விடை கண்டுபிடி. எனக்கு ஒரு குழப்பமும் இல்லை, சும்மா தெரிஞ்சுக்கலாமென்னு தான். தப்பா? ஏகப்பட்ட குழப்பம் சார், எவனை நம்பறதுன்னே தெரியலை, எது பண்ணாலும் தப்பு வருது. குத்தம் சொல்றாங்க, ரொம்ப அப்செட் ஆய்ட்டேன் சார், தூக்கமே வரலை; என்னைப் புரிந்துகொள்ள என் மனசின் உண்மையான நிலை பற்றி அறிய ஆவல். என்னை அறிய, எல்லாம் அறியமுடியும் என்கிற நம்பிக்கை. எல்லாம் கற்றுக் கொள்ள எண்ணம் தியானம் அதில் ஒன்று அவ்வளவே.

இதில் எதுவாயினும் உங்கள் பதிலாய் இருக்கலாம். எதற்கும், எந்த பதிலுக்கும் வெட்கப்படத் தேவையில்லை. ஏனெனில், இது உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியப் போவதில்லை. எதுவாயினும், எந்த காரணம் இருந்தாலும் உண்மையானதாய் இருக்கட்டும். உள்ளுக்குள்ளே பொய்யில்லாது இருக்கட்டும். பொதுவாய் பேசுவதை விடுத்து, தியானம் பற்றி என்னிலிருந்து என் அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

ஏனெனில் இந்த கட்டுரையின் நோக்கம் தியானம் செய்ய ஆர்வம் ஊட்டுதலே, தியானத்தில் தெளிவது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் உறுதியைப் பொறுத்து அமைவது. அந்த உறுதி எங்கிருந்து வரும் என்பதை என் அனுபவமாக சொல்ல நினைக்கிறேன்.

Friday, 29 July 2022

சத்து இருக்கும்போதே செத்துப் போ! - கவிஞர் வைரமுத்து



 ருபதுகளில்... எழு!

உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு!




ஜன்னல்களை திற்ந்து வை. 
படி... எதையும் படி !
வாத்யாசனம் கூட
காமம் அல்ல, கல்விதான்... படி!

பிறகு, புத்தகங்களை எல்லாம்
உன் பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா !
உன் சட்டைப்பொத்தான், கடிகாரம்,
காதல், சிற்றுண்டி, சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால்
எந்திர அறிவுகொள்!

ஏவாத ஏவுகணையேனும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்!
மனித முகங்களை மனசுக்குள் பதிவுசெய்! 
சப்தங்கள் படி!  சூழ்ச்சிகள் அறி!

திருடு... திருப்பிகொடு!
பூமியில் நின்று வானத்தை பார்...
வானத்தில் நின்று பூமியை பார்!

உன் திசையை தெரிவுசெய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலை சுகி...காதலில் அழு!

இருபதுகளின்...
இரண்டாம் பாகத்தில் மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த
இன்பம் கையளவுதான்...
மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கை என்பது
உழைப்பும் துய்ப்பும் என்று உணர்!
உனது அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்... இன்னும்...
சூரியகதிர்கள் விழமுடியாத ஆழத்தில்!.

முப்பதுகளில்...
சுறுசுறுப்பில் தேனீயாய் இரு!
நிதானத்தில் ஞானியாய் இரு!.
உறங்குதல் சுருக்கு...உழை...
நித்தம் கலவி கொள்!

உட்காரமுடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒழித்து வைத்திருப்பான்...
கைப்பற்று!

ஆயுதம் தயாரி... பயன்படுத்தாதே!
எதிரிகளை பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,
இடி பிளக்காத ஆழத்துக்கு அனுப்பு!
கிளைகளை,
சூரியனுக்கு நிழல் கொடுக்கும்
உயரத்துக்கு பரப்பு!  நிலைகொள்...
நாற்பதுகளில்...
இனிமேல்தான் வாழ்க்கையின் ஆரம்பம்..
செல்வத்தின் பாதியை
அறிவின் முழுமையை செலவழி!

எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டை ஓடுகளில் தீட்டு!
ஒருவனை புதைக்க
இன்னொருவனை குழிவெட்ட சொல்!
அதில் இருவரையும் புதை...

பொருள் சேர்...
இரு கையால் ஈட்டு!
ஒரு கையாலேனும் கொடு!
பகல் தூக்கம் போடு...

கவனம்... இன்னொரு காதல் வரும்!
புன்னகை வரை போ...புடவை தொடாதே!
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு,
இனிமேல் லட்சியத்துக்கு
நீதான் இலக்கு!

ஐம்பதுகளில்...
வாழ்க்கை... வழுக்கை...
இரண்டையும் ரசி!
கொழுப்பை குறை!
முட்டையின் வெண்கரு...
காய்கறி, கீரை கொள்!
கணக்குப் பார்!
நீ மனிதனா?
என வாழ்க்கையை கேள்.
லட்சியத்தை தொடு!
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!

அறுபதுகளில்...
இதுவரை வாழ்க்கைதானே
உன்னை வாழ்ந்தது...
இனியேனும்...
வாழ்க்கையை நீ வாழ்ந்து பார்!
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு!
மனிதர்கள் போதும்...
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு...
கிளியோடு பேசு...
மனைவிக்கு பேன் பார்!
பழைய டைரி எடு!
இப்போதாவது உண்மை எழுது!

எழுபதுகளில்...
இந்தியாவில், இது உபரி...
சுடுகாடு வரை நடந்துபோக
சத்து இருக்கும்போதே
செத்துப் போ!

ஜண கண மண!


நன்றி: கவிஞர் வைரமுத்து

33 கோடி தேவர்கள்


இந்துதர்மத்தைப் பற்றிய பல தவறான தகவல்களில் ஒன்றுதான் இந்த 33 கோடி தெய்வங்கள். இது ‘கோடி’ எனும் சொல்லுக்கு பிரம்மாண்டம் என மற்றொரு பொருள் இருப்பதை மறந்ததால் ஏற்பட்ட குழப்பமாகும்.

வேதங்களில் 33 தெய்வங்களைப் பற்றி குறிக்கப்படுகின்றது. இந்துதர்மத்தில் குறிக்கப்படும் 33 பெருந்தெய்வங்களைப் பற்றி “த்ரயஸ்த்ரிம்ஸ தேவ” என்று பௌத்த மத சாஸ்திரங்களான திவ்யவதனம் மற்றும் சுவர்ணபிரபஸ சூத்திரமும் கூட குறிக்கின்றன.

’கோடி’ என்றால் மிகச்சிறந்த, ஒப்புயர்வற்ற, நேர்த்திவாய்ந்த எனப் பல அர்த்தங்கள் உள்ளன. இதேபோல் தான், 725ஆம் ஆண்டு மஹாவைரோசன சூத்திரம் எனப்படும் பௌத்த மதம் சூத்திரத்தை சீன மொழியில் மொழிப்பெயர்க்கும் போது சப்தகோடி புத்தர்கள் என்பதை ‘7 கோடி புத்தர்கள்’ என்று மொழிப்பெயர்த்து விட்டனர். உண்மையில், சப்த கோடி புத்தர்கள் என்பது 7 தலைச்சிறந்த புத்தர்களைக் குறிக்கும். பின்னர், திபெத்திய பௌத்தர்கள் ‘கோடி’ எனும் சொல்லுக்கு வகை எனும் பொருள் கொண்டு, 7 வகையான புத்தர்கள் என்று மொழிப்பெயர்த்தனர்.

பிரகதாரண்யக உபநிடதத்தில் (சுக்ல யஜுர்வேதம்), 3ஆம் அத்தியாயத்தில் 33 பெருந்தெய்வங்களை யாரென்று விவரமாகக் குறிக்கப்படுகின்றது. 33 பெருந்தெய்வங்கள் – 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வின்கள். ஆகவே, 33 கோடி (330 மில்லியன்) தெய்வங்கள் என்பது தவறு. 33 பெருந்தெய்வங்கள் என்பதே சரியாகும்.

* 8 வசுக்கள் – பிரித்திவீ (பூமி), அக்கினி, ஆபம் (நீர்), வாயு, அந்தரிக்‌ஷம் (அண்டவெளி), சூரியன், சந்திரன், ஆகாயம். இந்த அஷ்டவசுக்களுக்கும் அதிபதியானவர் விஷ்ணு.

* 11 ருத்திரர்கள் – ஆனந்தம், விஞ்ஞானம், மனம், பிராணம், வாக்கு (இவை ஐந்தும் கருத்துப் பொருட்கள், இறையம்சம்) மேலும், சிவனின் 5 முகங்களான/பெயர்களான ஈசானம், அகோரம், த்தபுருஷம், வாமதேவம், சத்யோஜதம் ஆகியவை. மற்றொன்று, ஆத்மன். இவை பதினொன்றும் ருத்திரர்கள், அனைத்திற்கும் மூலமானவர் சிவன்

* 12 ஆதித்யர்கள் – மித்ரன், அர்யமன், பகன், வருணன், தக்‌ஷன், அம்ஷன், துவாஸ்த்ரன், பூஷன், விவஸ்வத், சாவித்ரன், சக்ரன், மற்றும் இவையனைத்திற்கும் மூலதானவர் விஷ்ணு. இந்த பன்னிரண்டும் விஷ்ணுவின் அம்சங்கள்

* 2 அஸ்வின்கள் – இந்திரன், பிரஜாபதி

Thursday, 28 July 2022

தமிழ் மொழியின் தொன்மை

 


தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடுசூல்கலை வாணர்களும் – இவள்என்று பிறந்தவள் என்றுண ராதஇயல்பி ளாம் எங்கள் தாய்

- மகாகவி பாரதியார்


தமிழ்மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்தொழிந்தன என மொழியியல் அறிஞர்கள் கருத்துத்துரைத்துள்ளனர்.

அவற்றுள் ஒரு சில மொழிகள் மட்டுமே இன்னும் அழியாமல் நிலைபெற்றுள்ளன. அவ்வாறு நிலைபெற்ற மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே காட்சியளிக்கின்றன.

கால மாற்றத்திற்கேற்ப புத்தம்புது மொழிகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி மாயும் மொழிகளுக்கிடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து விளங்குவன தமிழ், சீனம் முதலிய சில மொழிகளேயாகும்.

தமிழ் மிகவும் பண்பட்ட மொழி. தனக்கே உரிய வலம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி - மாக்ஸ் முல்லர்

பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது தமிழ் மொழியாகும்.

‘மாடு கிழமானாலும் பால் புளிக்காது’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே!.அப்பழமொழியின் பொருள்போல் தமிழ் எத்துணை பழமை வாய்ந்திடினும் இனிமை குன்றாத மொழியென்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

“தமிழ்” என்னும் சொல் முதன் முதலில் காணப்பெறும் நூல் தொல்காப்பியமாகும். “தமிழென் கிளவி”,”செந்தமிழ் நிலத்து” என வரும் நூற்பாத் தொடர்களில் இவ்வுண்மையைக் காணலாம். பனம்பாரனார்தம் தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் “தமிழ்கூறும் நல்லுலகத்து” எனும் தொடரும் தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுவனவாம். “தமிழ் வையைத் தண்ணம் புனல்” என எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடல் தமிழின் இனிமையைக் கூறுகின்றது.

செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ் ...................

மொகஞ்சதரோவில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் கூறுகள் தமிழில் காணப்படுகின்றன. அதனால் இப்போது உலகில் பேசப்படுகின்ர மிகவும் பழமையான மொழி தமிழ் மொழிதான். ஐரோப்பிய மொழிகளில் உள்ள சொற்கள் பலவற்றின் மூலங்கள் தமிழில் காணப்படுகின்றன.
- ஹீராஸ் பாதிரியார்

சுமேரியர் – ரோமானியர் – கிரேக்கர் ஆகிய பண்டைய இனத்தவர்கள் நாகரிகமுடையவர்களாக விளங்குவதற்கு முன்னரே தமிழர்கள் செப்பமிட்ட சீரிய நெறிகளைக் கடைப்பிடித்து பண்புடையோராய் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதம் – ஹிப்ரு – கிரேக்கம் ஆகிய மொழிகளிலுள்ள பழைய இலக்கியங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று மொழியியலர் இராய்ஸ் டேவிட்ஸ் கூறுகிறார்.

மனித இனம் வாழவும் – வசிக்கவும் ஏற்புடைய நிலமாக விளங்கியது இன்றைய தமிழகத்தின் தென்நிலப்பரப்பு என்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும். அந்தத் தென்நிலப்பரப்பிலே பேசப்பட்ட மொழியானது மிகத் தொன்மை வாய்ந்த நமது உயர்தனிச் செம்மொழி தமிழாகும் என்பது பன்னாட்டு மண்ணியல், உயிரியல், அறிவியலாளர் ஆய்வுகளின் வழி கிடைக்கப்பெற்ற ஒருமித்த உண்மைக் கருத்துகள்.

குமரிக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதியே மக்கள் வாழ்வதற்குத் தக்க நிலையை அடைந்தது. அங்குதான் முதன் முதலில் மக்கள் தோன்றி வளர்ந்து நாகரிகத்தை உலகிற்குப் பரப்பினர்.
- அறிஞர் ஹெக்கல்

உலகிலேயே மொழிக்கென முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ச் சங்கமே. தமிழ் மொழியின் வாழ்வுக்கும் உயர்வுக்கும் சிறப்பீட்டித் தந்த பெருமைக்கு உரியவர்கள் சேர,சோழ,பாண்டிய மன்னர்களே. தமிழினம் சிறப்புற்றிருக்கும் வகையில் தமிழைச் சீர்செய்யவும் வளப்படுத்தவும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயலாற்றியவர்கள் பாண்டிய மன்னர்களே என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நான் முதன் முதலில் தமிழர்களிடத்தே எனது சமயத்தைப் பரப்புவதற்காகவே தமிழைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் படிக்கத் தொடங்கும்போதே, அதன் இனிமையும் எளிமையும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. உலகத்தின் தலைசிறந்த ஒரு மொழியைக் கற்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அன்றிலிருந்து தமிழைக் கற்பதிலும் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதிலுமே எனது வாழ்நாளைச் செலவிட்டேன்.
-போப்பையர்

தமிழின் தொன்மையையும் இனிமையையும் அறிந்து அனுபவித்து மேலும் செழிப்புடையதாக்கவும் செம்மைப்படுத்தவும் கற்றறிந்த மேதைகளை ஒன்றிணைத்து மொழி ஆய்வு செய்யவும் அரும் பெரும் இலக்கியங்களை உருவாக்கவும் முதல் சங்கத்தைத் தோற்றுவித்தவன் காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். காய்சினவழுதி முயற்சியால் விளைந்ததே முதற்சங்கம்.

குமரிக் கண்டத்திலே தோற்றுவிக்கப்பட்ட முதற்சங்கத்தின் காலம் ஏறத்தாழ பதின் மூன்றாயிரம் ஆண்டுகளாகும். நூற்றுக்கணக்கான புலவர்கள் தமிழ்த்தொண்டாற்றிய ஏறக்குறைய 4400 ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்த இந்த தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னர்கள் கண்ணும் கருத்துமாய் பேணி வளர்த்தனர். ‘கடுங்கோன்’ என்ற மன்னன் காலத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் முதற்சங்கம் அழிவுற்றது.

இடைச்சங்கம் வெண்டேர்ச்செழியன் என்ற பாண்டிய மன்னனால் கபாடபுரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் இயங்கி வந்தது. மீண்டும் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் இடைச்சங்கமும் அழிவுற்றது.

சிலகாலங் கழிந்து முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனின் பெருமுயற்சியால் தமது தலைநகரான மதுரை நகர் எனப்படும் கூடல் மாநகரில் கடைச்சங்கம் தோற்றம் கண்டது. ஏறத்தாழ 1800 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கிய இக்கடைச் சங்கமும் காலச்சூழ்நிலை காரணத்தால் மறைந்து போனது. மாணவர்களே! மொழிக்கெனச் சங்கம் வைத்து வளர்த்த மூத்த தமிழினத்தின் வரலாறு இப்படித்தான் முடிவுற்றது.

தமிழின் நிலைப்பாட்டிற்கு வழிகோலிய பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தை களப்பிரர், பல்லவர், மராட்டியர், முகமதியர்கள், நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல்லினத்தவர் ஆட்சி செலுத்தினர். அதிகார பீடத்திலிருந்தோரின் பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றின் தாக்குறவால் தமிழ் இலக்கியத்திலும் பற்பல மாறுதல்கள் உருபெற்றன.

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
-பாவேந்தர் பாரதிதாசன்

நன்றி - தமிழ் மாறன் 

தம்பி

 


சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி  இன்று (ஜூலை 28ம் தேதி) தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோக மற்றும் சின்னத்தைச் சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

குதிரை வடிவிலான வெளியிடப்பட்ட சின்னத்துக்குத் தம்பி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



செஸ் விளையாட்டில் புதுமையான முறையில் சாதனை செய்த ஒருவராய் பற்றி ஓர் உரையில் நான் தெரிவித்திருக்கின்றேன். அவ்வுரை கேட்க 

Pl Click here 

Wednesday, 27 July 2022

Tuesday, 26 July 2022

அணு - திருமூலர்


 




அணுவின் அணுவினை ஆதிபிரானை

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுக விலார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே




இன்றைய விஞ்ஞானிகள் "ஹிக்ஸ் போஸான்"  என்று பெயரிட்டு அணுவுக்குள் இருக்கும் நுண் அணுக்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதை  கடவுள் துகள்கள் என்று  கூறுகிறார்கள். 

கண்ணுக்கு தெரியாத இந்த நுண்துகள்கள் மலையையும்,கடலையும்,பூமியையும்,பிரபஞ்சத்தையும் ஊடிருவி நிறைந்திருக்கின்றன. நாம் அதனுள் மூழ்கியிருக்கிறோம். நம்முள் அது நிறைந்திருக்கிறது என்பது தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியின் கண்டு பிடிப்பு. 

இதை சிந்தனை மூலம் அன்றே உணர்ந்து பாடல் எழுதினார்.  நியாயமாய் நடக்க வேண்டும் என்று அதில் உண்மையாய் இருப்பவர்களின் சிந்தனைகள்  மட்டுமே சக்தியாய் மாறி  இறைவனை அணுக வைக்கும், என்கிறது இப்பாடல்