இயற்பியலுக்கென முதன்முதலில் நோபல் பரிசினைப் பெற்ற தென்னிந்தியர் சந்திரசேகர் வெங்கட்டராமன் (சி.வி.ராமன்) ஆவார்.
திருச்சிராப்பள்ளியில் 'சந்திரசேகர் அய்யர் - பார்வதி அம்மாள்' தம்பதியருக்கு 07-11-1888ல் இவர் பிறந்தார். இவரது தந்தை, சந்திரசேகர் உள்ளூரிலுள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியில் இருந்தார்.
சி.வி.ராமன் சென்னை ராஜதானிக் கல்லூரியில் பி.ஏ.பட்டமும், மாநிலத்திலேயே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று எம்.ஏ.பட்டமும் பெற்றார் (1907).
லோகசுந்தரியைத் திருமணம் செய்து கொண்டார். மனைவிக்கு வீணை வாசிப்பில் அலாதியான திறமை உண்டு.
சி.வி.ராமன் பட்டப்படிப்பை முடித்ததும் அரசு வேலை கிடைத்தது. கல்கத்தாவில் இணை முதன்மைக் கணக்கு அலுவலராகப் பொறுப்பேற்றார். அரசின் நிதித் துறையைச் சார்ந்த பணியாகும் இது (1907).
பின்னர் ரங்கூன், நாக்பூர் போன்ற ஊர்களில் பணிகளைச் செய்தார். மீண்டும் கல்கத்தாவின் முதன்மைக் கணக்கு அலுவலராக மாற்றம் பெற்றார் (1911).
பின் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் பதினாறு ஆண்டுகள் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.
சர்.அஷுடோஷ் முகர்ஜி என்பவருடன் இணைந்து அறிவியல் இதழ் ஒன்றை வெளியிட்டார். பின்னாளில் அது இண்டியன் ஜர்னல் ஆஃப் பிசிக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இண்டியன் சயின்ஸ் காங்கிரசின் தலைவர் ஆனார் சி.வி.ராமன் (1928).
டாட்டா நிறுவனத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார் (1933). இண்டியன் சயின்ஸ் அகாதமியை நிறுவினார் (1934).
பெங்களூரிலுள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி, அதன் இயக்குநராகவும் ஆனார் (1943).
சோவியத் அகாடமி ஆஃப் சயின்ஸின் செய்தித் தொடர்பு அங்கத்தினராக நியமனம் செய்யப்பட்டார் (1947). இவருக்கு தேசீயத் பேராசிரியர் அங்கீகாரம் கிடைத்தது (1948).
பாரீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ், அயல்நாட்டின் கூட்டுப் பிரதிநிதியாக நியமனம் கிடைக்கப் பெற்றார் (1949).
எண்ணற்ற அறிவியல் புத்தகங்களை எழுதியவர் சி.வி.ராமன். ஆனாலும் இவர் சங்கீதத்தைப் பற்றிய ஒரு குறிப்பிட்டத்தக்க புத்தகத்தை எழுதியிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.
மாலிக்யூலர் டிஃப்ராக்ஷன் ஆஃப் லைட்; மெக்கானிக்கல் தியரி ஆஃப் பெளடு ஸ்டிரிங்ஸ் மற்றும் டிஃப்ராக்ஷன் ஆஃப் எக்ஸ்ரேஸ் ; தியரி ஆஃப் மியூசிக்கல் இன்ஸட்ரூமென்ட்ஸ் மற்றும் பிசிக்ஸ் ஆஃப் கிரிஸ்டல் ஆகிய புத்தகங்கள் முக்கிய அறிவியல் நூல்களாகக் கருதப்படுகின்றன.
இவருக்கு வயலின் வாசிப்பதில் விருப்பம் அதிகம். உலகின் பல நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழகங்கள் சி.வி.ராமனுக்கு டி.எஸ்.ஸி கெளரவப் பட்டங்களை வழங்கியுள்ளன.
லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் இவருக்கு வழங்கப்பட்டது (1924). பிரிட்டிஷ் அரசு 'நைட்ஹீட்' பட்டம் கொடுத்து கெளரவித்தது (1929).
இத்தாலியின் கெளரவமிக்க 'மேட்யூச்சி' பதக்கம் வழங்கப்பட்டது (1928).
மைசூர் அரசர் 'ராஜ்சபாபூஷன்' பட்டத்தை இவருக்கு வழங்கினார் (1935). பிலிடெல்பியா இன்ஸ்டிடியூட்டின் ஃபிராங்க்ளின் பதக்கம் (1941); அகில உலக லெனின் பரிசு (1957) ஆகிய பரிசுகள் பெற்றவர் சி.வி.ராமன்.
இயற்பியலுக்கான நோபல் பரிசும் லண்டன் ராயல் சொசைட்டியின் 'ஹீயூகஸ்' பதக்கமும் ஒரு சேரக் கிடைத்தன (1930).
இவர் இந்தியாவின் உயர்விருதாகக் கருதப்படும் 'பாரத ரத்னா' தன் வாழ்நாளிலேயே பெற்றவர் என்ற பெருமையை உடையவர் (1954).
'ராமன் எஃபெக்ட்' என்ற கண்டுபிடிப்பின் வாயொலாக உலகம் மற்றும் இந்திய அளவிலும் புகழ்பெற்ற இப்பெருமகன் தன் எண்பத்து இரண்டாம் வயதில் பெங்களூர் நகரில் 21-11-1970 அன்று மரணம் அடைந்தார். தென்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்களில் சர்.சி.வி.ராமனும் ஒருவர்.
No comments:
Post a Comment