Friday, 8 July 2022

பொய்யும் பயமும்

ஒரு தப்புச் செய்தபோது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்துகொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்கத் தோன்றுகிறது. நியாயமாக, தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால், அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல் அந்தத் தப்பை அகற்றிவிடும். அப்படிச் செய்யாமல் தப்பை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் மூட வேண்டும் என்கிறபோது, பொய் சொல்ல வேண்டியதாகிறது.

அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல், மூடி மூடி வைத்தால் சீழ் பிடித்துச் சிரங்காகிவிடும். அது மாதிரி, தப்பை மூடியவுடன் அது பொய் என்ற சிரங்காக ஆகிவிடுகிறது. உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.

எதனால் தப்பை மறைக்கப் பார்க்கிறோம்? ஒன்று, நம்மை மற்றவர் நல்லவன் என்றே நினைக்க வேண்டும் என்ற பொய் எண்ணத்தினால்; அல்லது இன்னொருத்தரிடம் பயத்தினால் மறைக்கப் பார்க்கிறோம். பொய் என்பது சிரங்கு என்றால் பயம் என்பது சொறி மாதிரி.

பெரியவர்களிடமெல்லாம் உங்களுக்கு நிறைந்த மரியாதையும் மதிப்பும் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் அர்த்தமில்லாத பயம்கூடாது. பயம் உள்ளத் தூய்மையைக் கெடுக்கிற அழுக்கு. தப்பு செய்தால் கூட, அதை உணர்ந்து, பணிவுடன் உள்ளபடி பெரியவர்களிடம் சொல்ல வேண்டுமே ஒழிய, பொய்யால் மூடி மறைக்கக்கூடாது. தப்பு செய்தது போதாது என்று, பொய்யும் சொன்னோம் என்பது வெளிப்பட்டு நமக்கு மேலும் அவமானம், கஷ்டம்தான் ஏற்படும்.

உள்ளபடி சொன்னால் பெரியவர்கள் மன்னித்து விடுவார்கள். மன்னிக்காமல் அவர்கள் தண்டித்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. ‘நாம் தப்பு செய்தோம்; அதனால் அதற்குரிய தண்டனையைப் பெறுகிறோம்’ என்று தைரியத்துடன் தண்டனையை ஏற்க வேண்டும். தைரியம், சத்தியம் இவை எல்லாம் மன அழுக்கைப் போக்குகிற சோப், சீயக்காய் மாதிரி.

No comments:

Post a Comment