Saturday, 30 July 2022

தியானம் செய்வது எப்படி? - பாலகுமாரன்

 

தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும்


இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை.

சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது.

எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு.


தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்கள். என்ன செய்கின்றார்கள் என்ற ஆவல் இல்லாது போகும். அந்தரங்கம் தெரியும். பேராசையற்றுப் போகும். அவர்களும் நம்மைப் போல் நல்லதும், கெட்டதும் நிறைந்தவர்கள் என்கிற விருப்பு வெறுப்பற்ற நிலை வரும்.

இந்த நிறை வர அடுத்த வீடு என்ன என்பது எளிதாய் புரியும். அழகிய பெண் இருக்கிறாள் என்று ஆசைப்படாமல், அவலமான குடும்பம் என்று வெறுப்பு கொள்ளாமல் மனித சுபாவங்களை உணரமுடியும். அப்போது சிநேகம் எதிர்பார்ப்பின்றி இருக்கும். எதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களுக்கு புரிய, உள்ளத்தைத் திறந்து தானே உன்னிடம் கொட்டுவார்கள். அப்போது சலனமற்று பேச அடி ஆழத்தில் உள்ளதெல்லாம் வெளியே வரும். அடுத்த வீடு பற்றி சகலமும் புரியும். நான் மனிதர்களை புரிந்து கொள்ளும் விதம் இதுவே.

விருப்பு வெறுப்பற்ற மனம் எப்படி வரும்? ஏகப்பட்ட விருப்பங்கள் உள்ளனவே, கண்டபடிக்கு வெறுப்பு இருக்கிறதே, மேலும் கேள்வி வரலாம். எனக்கும் இருந்தது தோழா, மெல்ல மெல்ல மாறினேன். சொடுக்கு நேரத்தில் இது கை கூடாதய்யா. சொல்லிக் கொடுத்து விட்டால் வராது தம்பி. கற்றுக்கொடுப்பதில் விசேஷம் இல்லை. கற்றுக் கொள்வதில்தான் காரியம் உண்டு. நீச்சல் தரையிலா சொல்லித் தர முடியும். தியானத்தை புத்தகத்திலா எழுதி காட்ட முடியும். ஆர்வம் தூண்டலாம். ஒன்று இரண்டு மூன்று என்று விதிகள் எழுதலாம், படித்து விட்டு நீச்சல் குளம் தேடிப்போய் நீரில் இறங்க வேண்டும். குளிரக் குளிர நனைய வேண்டும். நீச்சல் விதிகள் மறந்து சும்மா தரையைப் பிடித்துக் நீச்சலடிக்கிறவர்களை வேடிக்கை பார்க்கும் புத்தி வரும். அதை விலக்கி கம்பியை பிடித்து உடம்பு லேசாக்கி கால் மட்டும் தூக்கிப் போட்டு பயிற்சி துவங்க வேண்டும். உடம்பு அசைக்காமல் வெறுமே முடிந்த வரை மிதக்க வேண்டும். இடைவிடாது நீச்சல் வரும் வரை செய்ய வேண்டும்.


ஏதோ ஒரு கணம் நீச்சல் வந்து விடும். என்ன காரணம்? தெரியாது. இது போலவே தியானமும். ‘தியானம் பண்றேன் மச்சி, நீயும் பண்ணு’ செய்து பழகும் முன்னே செயல்முறை பற்றி தம்பட்டம் அடிக்கத் தோன்றும். இந்த அலட்டல் தியானத்திற்கு எதிர் விஷயம், உடனே நிறுத்தி விடவேண்டும். இரண்டு நாள் செய்துவிட்டு முகம் மாறியிருக்கா என்று கண்ணாடி முன்பு பார்க்க தோன்றும். இது பொய், விலக்க வேண்டும். ‘இடுப்பு நோவுது, கால் மரத்தது போல் ஆகுது, இருபது நிமிஷம் சீக்கிரம் ஆயிட்டா நல்லா இருக்கும்’ இந்த வன்முறை வேண்டாம். இயலவில்லையெனில் எழுந்து உலவிவிட்டு மறுபடி உட்காருதல் நலம்.

கண்ணை மூடிக்கொண்டு தியானம் வந்துவிட்டது போலவும், பாலகுமாரன் போல் தாடி குங்குமம் வைத்து கொண்டது போலவும், ஊர் உறவு எல்லாம் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொள்வது போலவும் கற்பனை வரும். இது சுகம். ஆனால் விஷம். தவிர். இனியனே, பொய்யற்று இரு. உலகத்தாரிடையே பொய் சொல்வதை தவிர்க்க முடியாதிருக்கலாம், உனக்கு நீயே சொல்லலாமா. இதில் உபயோகம் உண்டா, யாரை ஏமாற்றப் பொய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளப் போகிறாயா, ஆமெனில் அழிவு நிச்சயம்.

கடும் உண்மையோடு இரு. கண்டிப்பான உண்மையோடு இரு. எதற்கு எனக்கு தியானம் என்று கேள்வி கேள், விடை கண்டுபிடி. எனக்கு ஒரு குழப்பமும் இல்லை, சும்மா தெரிஞ்சுக்கலாமென்னு தான். தப்பா? ஏகப்பட்ட குழப்பம் சார், எவனை நம்பறதுன்னே தெரியலை, எது பண்ணாலும் தப்பு வருது. குத்தம் சொல்றாங்க, ரொம்ப அப்செட் ஆய்ட்டேன் சார், தூக்கமே வரலை; என்னைப் புரிந்துகொள்ள என் மனசின் உண்மையான நிலை பற்றி அறிய ஆவல். என்னை அறிய, எல்லாம் அறியமுடியும் என்கிற நம்பிக்கை. எல்லாம் கற்றுக் கொள்ள எண்ணம் தியானம் அதில் ஒன்று அவ்வளவே.

இதில் எதுவாயினும் உங்கள் பதிலாய் இருக்கலாம். எதற்கும், எந்த பதிலுக்கும் வெட்கப்படத் தேவையில்லை. ஏனெனில், இது உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியப் போவதில்லை. எதுவாயினும், எந்த காரணம் இருந்தாலும் உண்மையானதாய் இருக்கட்டும். உள்ளுக்குள்ளே பொய்யில்லாது இருக்கட்டும். பொதுவாய் பேசுவதை விடுத்து, தியானம் பற்றி என்னிலிருந்து என் அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

ஏனெனில் இந்த கட்டுரையின் நோக்கம் தியானம் செய்ய ஆர்வம் ஊட்டுதலே, தியானத்தில் தெளிவது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் உறுதியைப் பொறுத்து அமைவது. அந்த உறுதி எங்கிருந்து வரும் என்பதை என் அனுபவமாக சொல்ல நினைக்கிறேன்.

No comments:

Post a Comment