Saturday, 15 October 2022

வானவூர்தி

அன்றைய மனிதன் கண்ட கனவை இன்றைய அறிவியல் முன்னேற்றம் நிஜமாக்கியது. தேடல் இருக்கும் இடத்தில்தான் வெற்றி கிடைக்கிறது. பறவையைக் கண்ட மனிதன் தானும் பறக்க நினைத்தான். இறக்கைகள் இல்லாதபோதும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. விளைவு விமானத்தின் துணையோடு விண்ணில் பறந்தான். இவ்விமானங்கள் பற்றிய பல குறிப்புகள் சங்கப் பாடல்களிலேயே பயின்று வந்துள்ளமையைக் காண முடிகிறது.

வலவன் ஏவ வானவூர்தி (புறம் 27)
எனும் பாடல் அடியில் வானவூர்தி என்ற அற்புதமான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். இதைப்போலவே சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக ஒரு காட்சி இதனை இளங்கோ
வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு
வானவூர்தி ஏறினள் மாதோ
கானமலர் புரிகுழல் கண்ணகி தானென் (3:196 - 200 )

என்ற வரிகளில் வாடாத பெரிய மலர்களை மழையாகப் சொரிந்து அமரர்களின் அரசனான இந்திரனும் வானோரும் வந்து வாழ்த்த தன் கணவன் கோவலனோடு கண்ணகி தேவ விமானத்தில் ஏறிச் சென்றாள் என்று கூறப்பட்டுள்ளது.


சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி, கட்டியங்காரன் போருக்கு வந்ததால் சச்சந்தன் தன் மனைவியை காப்பாற்ற அவளை மயிற்பொறியில் ஏற்றி அனுப்பினான் என்பது செய்தி. கட்டியங்காரனின் வெற்றி முழக்கத்தை வான் வழியே கேட்டு விசயை மயங்கி வீழ்ந்தாள். மயிற்பொறி இடப்புறமாகத் திரும்பி ஒரு சுடுகாட்டில் இறங்கி கால் ஊன்றி நின்றது என்பதாக அமைந்துள்ளது. இதனை,
எஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்
வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள்
(நா.இ., பா. 299)
என்றும்,

பல் பொறி நெற்றிக்
குஞ்சிமா மஞ்சை வீழ்ந்து கால்குவித்து இருந்து      (நா.இ., பா 30)

போன்ற வரிகளிலும் வானவூர்தி பற்றிய செய்திகளைக் காண முடிகிறது. மேலும் இதன் தொழில் நுட்பம் குறித்து கூறும்போதும், அதன் பொறியினை வலஞ்சுழி, இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ, தரையில் இறங்கவோ செய்ய முடியும் என்ற கற்பனை வியப்பிலாழ்த்துவதாக உள்ளது. இதனை,
பண்தவழ் விரலில் பாவை
பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து
விசும்பிடைப் பிறக்கும்: வெய்ய
புண்தவழ் வேல்கண் பாவை
பொறி இடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருள் வீழ்ந்து
கால் குவித் திருக்கும் அன்றே    (நா.பா.239)

இவை மட்டும் அல்லாமல் பல இலக்கியங்களில் இத்தகைய வானவூர்திகளைப் பற்றிப் பல பாடல்கள் காணப்படுகின்றன. பெருங்கதையிலும் இருப்பாலான விமானம் பறக்க பயன்படுத்தப்பட்டமை குறித்த குறிப்பு காணப்படுகின்றது. மனிதனின் பறக்க வேண்டும் என்ற ஆசை கற்பனையாக, இலக்கியமாக, தேடலாக தொடர்ந்து இன்று நிறைவேறியது.

இத்தகைய இலக்கியங்களை நோக்கும்போது தொகையும் பாட்டுமாக, சித்தர்களின் அரிய பொக்கிஷமாக, நாட்டுப்புற இலக்கியமாக இன்னும் எண்ணற்ற அறிவியல் உண்மைகள் இவற்றுள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உணர முடிகிறது. இவற்றுள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் மனித இனத்திற்குத் தேவையான பல மகத்தான அறிவியல் அறிவும் பல மருத்துவத் தீர்வுகளும் கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

நன்றி - இணையம்

No comments:

Post a Comment