இறைவன் குணங்களாக எட்டினைக் குறிப்பிடுவர். அவை
1) தன்வயத்தனாதல் : சுதந்திரம் உடையவனாய் விளங்குதல். அதாவது பிறர் வயப்பட்டுச் செயல்புரியாது அனைத்திலும் சுதந்திரமுடையன் ஆதல்.
2) இயற்கை உணர்வினன் ஆதல் : அனைத்தையும் தானே அறியும் தன்மை உடையவன் ஆதல்.
3) முற்றுணர்வினன் ஆதல். ஒருகாலத்தில் அனைத்துப் பொருள்களையும் அறிந்து நிற்றல். அதாவது ஒவ்வொரு பொருளையும்ஒ வ்வொன்றாக அறியாமல் எல்லாப்பொருள்களையும் ஒரே நேரத்தில் அறிதல்.
4) அளவிலா ஆற்றல் உடையவன் ஆதல் : எச்செயலையும் எக்காலத்தும் செய்ய வல்லமை உடையவன் ஆதல்.
5) வரம்பிலா இன்பம் உடையவன் ஆதல் : பேரின்பம் உடையவனாய் விளங்குதல்.
6) பேரருள் உடையவன் ஆதல் : பயன் கருதாது அருள்வழங்கும் தன்மை உடையன் ஆதல்.
7) இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல் : பாசம் என்னும் கட்டுக்குள் இறைவன் சேர்தலில்லை.
8) தூய இயல்பினன் ஆதல்: பாசம் சாராத காரணத்தால் குற்றங்களுக்குரிய உடம்பு இல்லாது தூய உடம்பை உடையவன் ஆதல்.
இறைவன் இவ்வாறு எட்டுக்குணங்களை உடையவன். அவன் அருள் புரிகின்ற பொழுது சக்திநிலையில் அருள் புரிகின்றான் என்பது சைவ சித்தாந்தக் கொள்கையாகும். இச்சக்தியைத்தான் பெண் வடிவமாகச் சைவ சித்தாந்தம் கொள்ளுகிறது. ஆனால் இறைவன் வேறு, சக்தி வேறு அல்ல. இறைவன் ஒருவன் என்றாலும், சிவம், சக்தி என்ற இரு தன்மைப்பட்ட நிலைகளில் நின்று முன்குறித்த ஐந்து தொழில்களைச் செய்கின்றான். இதற்கு உவமை சூரியனும், சூரியஒளியும் ஆகும். இந்தச் சக்தியின் மூலமாக இறைவன் அருளுகின்ற போது அருளவேண்டிய உயிர்களுக்கு ஏற்ப அருளுகின்றான். இவ்வாறு சைவசித்தாந்த தத்துவக் கொள்கையில் இறைவனைப் பற்றிய பொது, சிறப்புக் கொள்கைகள் கூறப் பெறுகின்றன. இத்தகைய முறையில் சைவசித்தாந்தத்தில் பதி பெறும் முக்கியத்துவம் தொடர்பாக அறியலாம்.
No comments:
Post a Comment