நான் ஏழாவது படிக்கும்போது மனப்பாடம் பகுதிக்காக நெட்ரு பண்ணிய
பாடல். தமிழாசிரியர் காவடி சிந்து மெட்டில் இதனை பாடி, எங்களை பாடவைத்ததால் இன்னும் மறக்காமலிருக்கின்றது.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே
(1) ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்துவேண்டிக் கேட்பார்கள், வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப்)பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின் தேரிற்பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்; வளைந்துள்ள இளம் பிறையைச் சூடியிருக்கின்ற சடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த திரிகூடமலையே எங்களுக்குரிமையாக நாங்கள் வாழ்கின்ற
மலையாகும்
No comments:
Post a Comment